2013-10-08 15:32:01

குடியேற்றதாரர் படகு கவிழ்ந்த லாம்பெதுசா தீவில் திருத்தந்தையின் பிறரன்புப் பணியாளர்


அக்.08,2013. தென் இத்தாலியின் லாம்பெதுசா தீவில் ஆப்ரிக்கக் குடியேற்றதாரர் பயணம் செய்த படகு கவிழ்ந்ததில் இறந்தவர்களுக்காகச் செபிக்கவும், அதில் உயிர்பிழைத்துள்ளவர்களுக்கு உதவுவதற்குமென தனது பிறரன்புப் பணியாளர் பேராயர் Konrad Krajewski அவர்களை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வட ஆப்ரிக்காவிலிருந்து 500க்கும் மேற்பட்ட குடியேற்றதாரரை ஏற்றிவந்த படகு இம்மாதம் 3ம் தேதி கவிழ்ந்ததில் இதுவரை 232 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன மற்றும் 155 பேர் உயிர்பிழைத்துள்ளனர். யாரோ ஒருவர் படகில் தீ வைத்ததில் படகு எரியத் தொடங்கியது. அதனால் பயணிகள் படகின் ஒரு பக்கத்துக்குச் செல்ல படகு கவிழ்ந்துள்ளது என இத்தாலிய அதிகாரிகள் சொல்கின்றனர்.
கடந்த ஜூலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தீவுக்கு ஒருநாள் திருப்பயணம் மேற்கொண்டு இங்குள்ள குடியேற்றதாரரைச் சந்தித்தார் மற்றும் படகில் கடலுக்குச் சென்று இத்தகைய பயணங்களில் ஏற்கனவே இறந்துள்ளவர்களை நினைத்து கடலில் மலர்வளையம் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவுக்கு வருவதற்கென பயணம் செய்த குடியேற்றதாரர்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 25 ஆண்டுகளில் மத்தியதரைக் கடலில் இறந்துள்ளனர் என ஐ.நா. கூறுகிறது.
மேலும், லாம்பெதுசா தீவில் இம்மாதம் 3ம் தேதி இறந்த ஆப்ரிக்கக் குடியேற்றதாரரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற வேண்டுமெனச் செபிப்பதற்காக, இப்புதன் காலை 8 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் Leonardo Sandri அவர்கள் தலைமையில் திருப்பலி நடைபெறும். இதில் திருப்பீட எத்தியோப்பிய கல்லூரிக் குழுவினரும் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி/CNS








All the contents on this site are copyrighted ©.