2013-10-07 15:39:03

வாரம் ஓர் அலசல் – நகரமா?,கிராமமா?


அக்.07,2013. RealAudioMP3 நாம் அனைவரும் நகரத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை, கிராமத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை. பலரும் பலவிதமான வாழ்வுச் சூழல்களில் வாழ்ந்து வருகிறோம். சென்னை மாநகரில் வாழும் பலரைக் கேட்டால் எங்கள் பூர்வீகம் என்று ஒரு கிராமப் பெயரைச் சொல்வார்கள். சென்னையில் வாழும் பல இசைமேதைகள், கலைஞானிகள், தொழிலதிபர்கள் என பலர் பிறந்தமண் கிராமமாகத்தான் இருக்கின்றது. உலகில் அண்மைக் காலங்களாகவே பலர் கிராமங்களைவிட்டு நகரங்களில் சென்று குடியேறத் தொடங்கிவிட்டனர். இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 127 கோடிக்கு அதிகம். மக்கள்தொகையில் உலகில் இரண்டாவது இடத்தை வகிக்கும் இந்தியா, 2050ம் ஆண்டில் 169 கோடியைக் கொண்டு முதலிடத்துக்கு வரும் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் கணித்துள்ளது. இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகையில் 50 விழுக்காட்டுக்கு அதிகமானோர் 25 வயதுக்குக் கீழும், 65 விழுக்காட்டுக்கு அதிகமானோர் 35 வயதுக்குக் கீழும் உள்ளனர். இந்நிலையில் வேலைதேடி வெளிநாடுகளின் நகரங்களுக்கும் உள்நாட்டு நகரங்களுக்கும் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே மக்கள்தொகை அதிகமாகவுள்ள மாநிலமாக, தமிழகம் மாறிவருகிறது.
நகரங்களில் மக்கள்தொகை பெருகப் பெருக, அவற்றின் உள்கட்டமைப்புக்களை முன்னேற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இக்காலத்திய வெப்பநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்கள் போன்றவற்றைச் சமாளிக்கும் வகையில் நகரங்கள் அமைக்கப்பட வேண்டுமென ஐ.நா.அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். குடியிருப்பு வசதிகளின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக, ஐ.நா.நிறுவனம் அனைத்துலக குடியிருப்பு நாள் ஒன்றையும் ஏற்படுத்தி, அந்நாளை ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதல் திங்கள்கிழமையன்று கடைப்பிடித்து வருகிறது. இவ்வாண்டின் இத்தினம், அக்டோபர் 7, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டது. இவ்வாண்டின் 27வது அனைத்துலக குடியிருப்பு நாளைச் சிறப்பிப்பதற்குப் பத்துக் காரணங்களை அறிவித்துள்ளது ஐ.நா. நிறுவனம்.
உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் நகரங்களில் வாழும்வேளை, இந்த நகரங்கள் 21ம் நூற்றாண்டுக்கு சவால்களாக இருக்கின்றன, நகரங்களில் உலக மக்கள்தொகை 2030ம் ஆண்டில் 60 விழுக்காடாகவும், 2050ம் ஆண்டில் 70 விழுக்காடாகவும் இருக்கும், 10 இலட்சத்துக்குமேற்பட்ட மக்கள் வாழும் நகரங்கள் 450க்கு அதிகமாகவும், இவற்றில் 20க்கும் அதிகமான மாநகரங்கள் ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்களையும் கொண்டிருக்கின்றன, தற்போது 100 கோடிப் பேர் வசதியற்ற குடியிருப்புக்களில் வாழ்கின்றனர், 2020ம் ஆண்டில் 88 கோடியே 90 இலட்சம் நகரவாசிகள் சேரிகளில் வாழ்வர், எனவே வெப்பநிலை மாற்றத்தால் உருவாகும் கடும் இடர்களை இம்மக்கள் எதிர்நோக்குவர், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வாயுக்கள் வெளியேற்றத்தில் 70 விழுக்காட்டுக்குப் இந்நகரவாசிகள் பொறுப்பேற்பர், நகரங்களில் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும், தொழில் செய்வோர் மேலும் பொருள்சேர்ப்பவர்களாகவும் மாறுவர், வருங்கால இளைய தலைமுறைக்கு நகரங்களே புகலிடமாக அமையும், உலகில் பல நகரங்களில் 50 விழுக்காட்டுக்கு அதிகமானோர் 24 வயதுக்கு உட்பட்டவர்களாய் இருக்கின்றனர், நகரங்கள், படைப்பாற்றல் திறனுக்கும், புதுவிதமான செயல்களில் ஈடுபடுவதற்கும் உதவுகின்றன, அனைத்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் 85 விழுக்காடும், உலகப் பொருளாதாரச் செயல்பாடுகளில் 66 விழுக்காடும் நகரங்களில் இடம்பெறுகின்றன, மொத்தத்தில் நாம் அனைவருமே நகரங்களை அன்புகூருகிறோம்....
இவை போன்ற காரணங்களால் நாம் அனைவரும் சேர்ந்து செயல்பட்டால் அனைவரும் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களை அமைக்கலாம் என்று ஐ.நா. கூறுகிறது. ஆதலால் நகரங்களின் முக்கியத்துவம் குறித்து இந்த அனைத்துலக குடியிருப்பு நாளில் நாம் மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும் ஐ.நா.நிறுவனம் நம்மைக் கேட்கிறது. இந்நாளுக்கென செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் அவர்களும், அனைத்து மக்களும் வாழ்வதற்கும், இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்கும் உகந்த இடங்களாக நகரங்கள் அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். உலகின் பெருமளவான நாடுகளில் நகரப்புறமயமாதல் 50 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்று வருகிறது. வரும் பத்தாண்டுகளில் உலக மக்கள்தொகை நகரங்களில் 90 விழுக்காடு அதிகரிக்கும். எனவே நகரங்களின் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டுமெனவும் பான் கி மூன் கேட்டுள்ளார்.
RealAudioMP3 இந்தியாவின் மும்பையில் ஒரு மாதத்துக்கு ஒரு கட்டிடம் வீதம் இடிந்து விழுகின்றது. கடந்த செப்டம்பரில் ஒரு குடியிருப்பு இடிந்ததில் 60க்கும் அதிகமானோர் இறந்தனர் இந்நகரின் பல கட்டிடங்கள் பாதுகாப்பற்றதாய் இருந்தாலும் வேறுவழியின்றி மக்கள் தொடர்ந்து அவற்றில் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தின் மயிலம் ஒன்றியத்திலுள்ள பாதிராபுலியூரில் இருளர் குடியிருப்புகள் பழுதடைந்துள்ளதால் அங்கு வாழும் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மழைக்காலங்களில் அவதியடைகின்றன. இவையிரண்டும் கடந்தவாரச் செய்திகள். அன்பர்களே, நகர வாழ்க்கை, வாழ்வளிப்பது ஒருபுறமிருக்க, மறுபுறம் வாழ்வில் எதிர்மறைத் தாக்கங்களையும் பலருக்கு ஏற்படுத்துகின்றது. நகரவாழ்க்கை குறித்து தெருப்பாடகன் என்ற பெயரில் இலங்கையின் மன்னார் அன்பர் ஒருவர் இப்படி எழுதியுள்ளார்....
நகர வாழ்க்கையின் பாதியை நிரம்பி வழியும் பேருந்துகளும், அவை சுமக்கும் வியர்வை நாற்றங்களும், எதிர்ப்பு ஊர்வலங்களும், சாலை நெரிசல்களுமாய்ச் சர்வாதிகாரமாக விழுங்கிக் கொண்டிருக்கின்றன... கடற்கரைக் காற்றுக்கும் வர்த்தகச் சாயம் பூசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சுத்தமான காற்றைச் சுவாசிக்க கியூவில் நின்று டிக்கட் எடுக்க வேண்டி வரலாம்... விரைவு உணவுகள் நாக்கை ஏமாற்றி, விரைவாகவே சிறு குடலில் விஷமாகின்றன. இப்படியிருந்தும் இவை விரும்பி உண்ணப்படுகின்றன! போட்டி போட்டுக்கொண்டு வளரும் கட்டடங்கள் பொருளாதாரத்தைக் கூட்டுகின்றனவாம்... கட்டடங்களில் நிற்கும் ஒலிவாங்கிக் கோபுரங்களின் அலைக்கற்றைகள் மனித ஆயுளைக் குறைக்கின்றனவே! சொகுசு வாகனங்களில் ஆங்கிலம் பேசி, பணத்தால் அடிக்கும் மேல்தட்டு வர்க்கத்தவரையே நகரம் மென்மையாகத் தாங்குகின்றது! மனிதத்துடன் வாழ்வதற்கான தகுதியை எப்போதோ இழந்துவிட்டது நகரம்!
என்று எழுதியிருக்கிறார். "நகர வாழ்க்கையா? கிராம வாழ்க்கையா? எது சிறந்தது?" என்று விவாதமேடை நடத்தினால், அன்புள்ளங்களே உங்கள் பதில் என்னவாக இருக்கும்? கிராமங்களில் வாழும் மனிதர்களைவிட நகரங்களில் வாழும் மனிதர்கள் அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது. நகர்ப்புறத்தில் காணப்படும் வேறுபட்ட சமூக அமைப்பு, அதிக சப்தம், மக்கள் நெருக்கடி ஆகியவை காரணமாக மூளையின் அதிக உணர்வு மிக்கதான மற்றும் மனஅழுத்தத்துடன் தொடர்பு கொண்ட amygdalae என்ற பகுதி அதிகமாகச் செயல்படுவது தெரியவந்துள்ளது. மேலும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் பகுதியாகவும், சுற்றுப்புறத்தோடு தொடர்பு கொண்டதாகவும் விளங்கும் மூளையின் மற்றொரு பகுதியான cingulate cortex, நகர்ப்புறத்தில் பிறந்தவர்களிடம் தேவையற்ற வகையில் அதிகமாகச் செயல்படுவதும் ஆய்விலிருந்து தெரிய வருகிறது. 2050ம் ஆண்டுக்குள் ஏறக்குறைய 70 விழுக்காட்டினர் நகர்ப்புற வாழ்க்கைக்கு வந்துவிடுவர் எனக் கூறப்படுவதால் ஒழுங்கற்ற மனநிலை, எதிலும் அதிக ஆர்வமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க சிறந்த மனநலத்துடன் வாழ்வதற்கு ஏற்ப நகர்ப்புறங்களைத் தற்போதிருந்தே வடிவமைத்து அதற்கேற்ற வகையில் வாழ்க்கை முறையினை அமைத்துக் கொள்வது நலம் தரும் என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
மக்கள் நகரங்களில் குடியேறுவது அதிகரிக்க, அதிகரிக்க நகரங்களில் அடுக்குமாடி கட்டிடங்களும் வளர்ந்து வருகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்வதால் நன்மைகளும், தீமைகளும் உள்ளன என்று சன் தொலைக்காட்சி நடத்திய ஒரு விவாதமேடையில் சமூக ஆர்வலர்களும், அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்பவர்களும் கூறியுள்ளனர். சமூக ஆர்வலரான பாடம் இதழ் ஆசிரியர் திருவாளர் நாராயணன் சொல்கிறார்....
RealAudioMP3 பொருளும் பணமும் பெற்று மகிழ்ச்சியாக வாழத்தானே மக்கள் நகரம் நோக்கிச் செல்கின்றனர். நகரமோ கிராமமோ எந்தச் சூழலிலும் மனஅழுத்தமின்றி மகிழ்ச்சியாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல நம்பகமான உறவுகள் வாழ்க்கைக்கு மிகவும் நல்லது. எனவே அன்பர்களே, உங்கள் உறவுகளுடன் இனிய சூழலை அமைத்துக் கொள்ளுங்கள். மனதை இலேசாக்கி உறவுகளை உற்சாகப்படுத்துங்கள். கவலைதான் மனஅழுத்தத்தின் ஊற்று. எனவே கவலைக்கு கட்டுப்பாடு விதியுங்கள். என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்துகொள்ள முயலுங்கள். மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள். மன்னிக்கும் பண்பு மன அழுத்தத்தை குறைத்துவிடும். இமயமலை ஏறிக் களைப்படைந்த ஒருவர், எதிரில் தென்பட்ட முனிவரிடம், ‘மலை உச்சிக்கு வழி எது எனக் காட்ட முடியுமா’? என்று கேட்டார். சற்றுநேரம் சிந்தித்த முனிவர், ‘நீ எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் சிகரத்தை அடையும் என்பதை உறுதி செய்துகொள். அப்போது அங்கே சென்று விடுவாய்’ என்று பதில் சொன்னார். ஆம். அன்பர்களே, உங்களின் ஒவ்வோர் எண்ணமும் செயலும் இறுதி இலக்கை நோக்கிச் சென்றால் உங்களை யாரும் தடுக்க முடியாது. நீங்கள் கிராமத்திலோ நகரத்திலோ எங்கும் வாழ்ந்தாலும் சிறப்படைவீர்கள்.







All the contents on this site are copyrighted ©.