2013-10-05 15:13:52

லாம்பெதுசா படகு விபத்து போன்ற இடர்கள் இடம்பெறாதிருக்க ஆப்ரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும்


அக்.05,2013. அமைதி, சுதந்திரம் மற்றும் போதுமான வேலைவாய்ப்புக்களை வழங்காத பல ஆப்ரிக்க அரசுகள், இத்தாலியின் லாம்பெதுசா(Lampedusa) தீவுக்கருகில் இவ்வியாழனன்று இடம்பெற்ற படகு விபத்தோடு தொடர்புடைய வெட்கத்துக்குரிய நிகழ்வில் பங்கெடுக்கின்றன என்று எத்தியோப்பியப் பேராயர் Berhaneyesus Demerew Souraphiel கூறினார்.
லாம்பெதுசா தீவுக்கருகில் இவ்வியாழனன்று இடம்பெற்ற படகு விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆப்ரிக்க குடியேற்றதாரர்கள் இறந்துள்ளதையடுத்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த Addis Ababa பேராயர் Souraphiel இவ்வாறு கூறினார்.
ஐரோப்பிய அரசுகள், குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் குறித்த தங்களின் கொள்கைகளை மேம்படுத்தவேண்டிய தேவை உள்ளது என்பதை வெளிப்படுத்திய பேராயர் Souraphiel, இதன்மூலம் குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோரின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் கூறினார்.
அதேசமயம், ஆப்ரிக்க அரசுகள் தங்களின் குடிமக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற வேண்டும், அதன்மூலம் இம்மக்கள் ஆபத்தான படகுப்பயணம் போன்றவற்றிலிருந்து தங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ள இயலும் என்றும் தெரிவித்தார் பேராயர் Souraphiel.
ஆப்ரிக்க இளையோர் தங்களின் கண்டத்திலே தங்குவதற்கு துணிச்சல் பெற்று ஆப்ரிக்க வாழ்வை மேம்படுத்த உழைக்குமாறும் ஊக்கப்படுத்தினார் Addis Ababa பேராயர் Souraphiel.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.