2013-10-05 15:01:29

திருத்தந்தை பிரான்சிஸ் : இளையோரே, திருமணம் செய்து குடும்ப வாழ்வைத் தொடங்குவதற்குத் துணிவு கொள்ளுங்கள்


அக்.05,2013. தனிமனித உரிமைகளைப் பறைசாற்றிவரும் இக்காலச் சமூகங்களில் எல்லாமே மேலோட்டமாக இருப்பதையும், எந்த விழுமியத்திலும் பிடிப்பு இல்லாமல் இருப்பதையும் பார்க்க முடிகின்றது, இச்சூழலில் திருமணம் செய்துகொள்வதற்குத் தீர்மானிப்பதற்குத் துணிவு தேவை என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளியன்று அசிசிக்கு ஒருநாள் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் இப்பயணத்தின் நிறைவு நிகழ்வாக உம்பிரியா மாநிலத்தின் ஏறக்குறைய நாற்பதாயிரம் இளையோரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
அசிசிக்குப் புறநகர்ப் பகுதியிலுள்ள புனித தூதர்களின் மரியா பசிலிக்கா (St.Mary of the Angels) வளாகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் திருமணம் போன்ற உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அஞ்ச வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
திருமணம், அழைப்பைத் தெரிவுசெய்தல், நற்செய்தி அறிவிப்பு, மேலும் நீதியான உலகை அமைத்தல் போன்ற இளையோரின் கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ், திருமணம், குடும்ப வாழ்வு ஆகியவை குறித்த கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசினார்.
குருத்துவம், துறவற வாழ்வு போன்று கிறிஸ்தவத் திருமணமும் ஓர் உண்மையான அழைப்பு என்றும், திருமணம் செய்துகொள்ளும் இரு கிறிஸ்தவர்கள் தங்களது அன்பு வரலாற்றில், இருவரும் ஒரே உடலாய் வாழ அழைக்கும் ஆண்டவரின் அழைப்பை உணருகிறார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.
குடும்ப வாழ்வைத் தொடங்குவதற்குத் துணிச்சல் தேவை என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இந்நவீன உலகம் இதற்கு உதவுவதில்லை, இவ்வுலகம், குடும்பத்தைவிட தனிமனித உரிமையை வலியுறுத்தி, உறவுகள் இன்னல்களைச் சந்திக்கும்வரைதான் நிலைத்திருக்கும் என்பதை ஒவ்வொருவரையும் ஏற்க வைக்க முயற்சித்து, தனது வழியில் குடும்ப வாழ்வுக்குத் தடைபோடுவதுபோல் தெரிகின்றது என்று தெரிவித்தார்.
கடவுள், மனித இயல்பில் திருமண அழைப்பை எழுதும்போது, விண்ணரசுக்காகக் கன்னிமை அல்லது கற்பு வாழ்வை ஏற்பது முழுமையான அழைப்பு, இது இயேசுவே வாழ்ந்த அழைப்பு என்றுரைத்த திருத்தந்தை, இறையாட்சிக்காகக் கன்னிமை வாழ்வை ஏற்பது, கடவுளின் அழைப்புக்கு முழுமையாய்ப் பதில் அளிப்பதாகும் என்றும் கூறினார்.
தினமும் செபிப்பதன்மூலம் கடவுளின் குரலைக் கேட்டு அழைப்பைத் தெரிவு செய்யலாம் என்றும் இளையோரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.