2013-10-05 15:16:31

இவ்வுலகுக்குத் தரமான கல்வியும், அதிக ஆசிரியர்களும் தேவைப்படுகின்றனர்,ஐ.நா. நிறுவனங்கள்


அக்.05,2013. 2015ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் ஆரம்பக்கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற ஐ.நா.வின் மில்லென்யம் இலக்கு எட்டப்பட வேண்டுமெனில் இவ்வுலகுக்குத் தரமான கல்வியும், அதிக ஆசிரியர்களும் தேவைப்படுகின்றனர் என்று ஐ.நா.வின் நான்கு நிறுவனங்கள் கூறுகின்றன.
செப்டம்பர் 5, இச்சனிக்கிழமையன்று அனைத்துலக ஆசிரியர்கள் தினம் சிறப்பிக்கப்பட்டதையொட்டி இவ்வாறு தெரிவித்த ஐ.நாவின் யுனெஸ்கோ, யுனிசெப், தொழில் நிறுவனம், வளர்ச்சித் திட்ட நிறுவனம் ஆகிய நான்கும், ஐ.நா.வின் மில்லென்யம் இலக்கு எட்டப்படுவதற்கு, இவ்வுலகுக்கு ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் என்று கூறின.
நம் வருங்காலத்துக்கான சாவி, பல வழிகளில் இன்றைய ஆசிரியர்களிடம் உள்ளது என்றும், ஆசிரியர்களின் வருங்காலத்துக்கான சாவி நம் கைகளில் உள்ளன என்றும் ஐ.நா. நிறுவனங்கள் கூறின.
சமுதாயத்தின் பொதுநலனுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுவதால் ஆசிரியர்களும், கல்வியின் அடிப்படை மனித உரிமைகளும் பாதிக்கப்படக் கூடாது என்றும் ஐ.நா. நிறுவனங்கள் வலியுறுத்தின.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.