2013-10-04 16:55:22

கிறிஸ்தவ ஒன்றிப்பின் தேவையை வலியுறுத்தியுள்ளது அந்தியோக்கியாவின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை


அக்.04,2013. அந்தியோக்கியாவின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும் இடையே இடம்பெற்ற அண்மையச் சந்திப்பு, இன்முக வரவேற்புடன் இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புவாய்ந்த ஒன்றாக இருந்த்தென்று அக்கிறிஸ்தவ சபையின் அறிக்கையொன்று கூறுகிறது.
அண்மையில் திருத்தந்தைக்கும் அந்தியோக்கியாவின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் பத்தாம் Youhanna Yazigiக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பு, இரு கிறிஸ்தவ சபைகளுக்கிடையே நிகழ்ந்த அதிகாரப்பூர்வ சந்திப்பு இல்லையெனினும், சிரியா மற்றும் மத்தியக்கிழக்குப்பகுதியின் அமைதி குறித்து திருப்பீடத்துடன் கலந்துரையாடவும், மோதல்களுக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தைகளே சிறந்த வழி என்ற திருப்பீடத்தின் நிலைப்பாட்டிற்கு ஊக்கமளிக்கவும், இச்சந்திப்பு இடம்பெற்றதாக அவ்வறிக்கை கூறுகிறது.
செப்டம்பர் 26க்கும் அக்டோபர் முதல் தேதிக்கும் இடையே திருப்பீடத்தில் இடம்பெற்ற சந்திப்புகளின்போது, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர், திருப்பீட அதிகாரிகளிடம், இவ்விரு கிறிஸ்தவ சபைகளும் ஒன்றிப்பை நோக்கி முன்னேறவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதாக கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.