2013-10-04 16:31:11

Lampedusa வில் நிகழ்ந்த துயர நிகழ்வுக்கு நாம் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும் - புலம்பெயர்ந்தோர் மற்றும் பயணிகளுக்கான திருப்பீட அவை


அக்.04,2013. இத்தாலியின் Lampedusa கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிவந்த படகு ஒன்று நீரில் மூழ்கியதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறித்து, தன் ஆழ்ந்த கவலையையும், அனுதாபங்களையும் வெளியிட்டுள்ளது, புலம்பெயர்ந்தோர் மற்றும் பயணிகளுக்கான திருப்பீட அவை.
நல்வாழ்வை நம்பிக்கையுடன் தேடிவந்த புலம்பெயர்ந்த மக்கள், இவ்வாறு உயிரிழந்த இந்நிகழ்வைப் போல மீண்டும் நிகழாதிருக்கவும், இப்பிரச்சனையைத் தீர்க்கும் வழிகளை ஆராயவும் இந்தத் துயர நிகழ்வு நமக்கு ஒரு பாடமாக அமையவேண்டும் என்று கூறும் இத்திருப்பீட அவை, நாம் ஒவ்வொருவரும் இத்துயர நிகழ்வுக்குப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
வட ஆப்ரிக்காவின் எரித்ரியா மற்றும் சோமாலியாவிலிருந்து அகதிகளாக, ஏறத்தாழ 500 பேர் பயணம் செய்த படகு, இத்தாலியின் Lampedusaவுக்கு அருகே தீப்பிடித்து மூழ்கியது. இந்த விபத்திலிருந்து இதுவரை 155 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர், 111 சடலங்கள் கடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளன, இன்னும் 200க்கும் அதிகமானோர் பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.