2013-10-03 16:17:38

மீட்பின் நினைவுகளை மகிழ்ச்சி நிறைந்த கொண்டாட்டமாக மாற்றவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்


அக்.03,2013. நாம் பெற்றுள்ள மீட்பின் நினைவுகளை, மகிழ்ச்சி நிறைந்ததொரு கொண்டாட்டமாக மாற்றவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
அக்டோபர் 3, இவ்வியாழன் காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், கர்தினால்கள் குழுவுடன் திருப்பலியாற்றியத் திருத்தந்தை, இறைவாக்கினர் நெகேமியாவின் வார்த்தைகளை தன் மறையுரையின் மையமாக்கினார்.
மீட்பின் நினைவுகளை நாம் ஒவ்வொருவரும் மனதில் சுமக்கின்றோம்; ஆனால், இந்த நினைவு, பழங்காலத்தில் உறைந்துபோன ஓர் அருங்காட்சியகப் பொருளா, அல்லது, ஒவ்வொரு நாளும் நம்மை மகிழ்விக்கும் கொண்டாட்டமா என்ற கேள்வியை திருத்தந்தை தன் மறையுரையில் முன்வைத்தார்.
ஒவ்வொரு நாளும் நாம் கொண்டாடும் திருப்பலி ஒரு சமுதாய நிகழ்வு அல்ல, மாறாக, நமது மீட்பையும், அதைக் கொணர்ந்த மீட்பரையும் மகிழ்வுடன் கொண்டாட நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு வாய்ப்பு என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
இறைவன் வழங்கிய மீட்பு ஒரு பழங்கால நினைவாக இருக்காமல், நம் வாழ்வை மகிழ்விக்கும் ஓர் அருள் ஊற்றாக மாறும் பழக்கத்தை நாம் ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள இறையருளை வேண்டுவோம் என்று திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.








All the contents on this site are copyrighted ©.