கற்றனைத்தூறும்... புனித பிரான்சிஸ் அசிசியும், விலங்குகள் தினமும்
அனைத்துலக விலங்குகள் நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 4ம் நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.
இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 1931ம் ஆண்டில் நடத்திய மாநாட்டில்
இந்த அனைத்துலக விலங்குகள் நாள் உருவாக்கப்பட்டது. இயற்கையின் அன்பரும், விலங்குகள் மற்றும்
சுற்றுச்சூழலின் பாதுகாவலருமான புனித பிரான்சிஸ் அசிசியாரின் விழா அக்டோபர் 4ம் தேதி
சிறப்பிக்கப்படுவதால், அனைத்துலக விலங்குகள் நாள், இவ்விழா நாளில் தொடக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது.
எனினும், இந்நாள், தற்போது விலங்குகளை அன்புசெய்யும் எல்லா மதத்தினர், நாட்டினர், சமூக
ஆர்வலர்கள் என எல்லாராலும் சிறப்பிக்கப்படுகிறது. அக்டோபர் 4ம் தேதிக்கு அருகில் வரும்
ஞாயிறன்று உலகின் எண்ணற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் விலங்குகள் ஆசீர்வதிக்கப்படுகின்றன. அத்துடன்
யூதமதத் தொழுகைக்கூடங்களிலும், விலங்குகள்மீது பற்றுகொண்ட அருள்பணியாளர்களால் பூங்காக்களிலும்,
வயல்களிலும் விலங்குகள் ஆசீர்வதிக்கப்படுகின்றன. அர்ஜென்டினா நாட்டில் இவ்வனைத்துலக விலங்குகள்
நாள், ஏப்ரல் 29ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது. ஏனெனில் இதே நாளில் 1926ம் ஆண்டு அர்ஜென்டினா
நாட்டு மருத்துவர் Lucas Ignacio Albarracín இறந்தார். இவர் Domingo Faustino Sarmiento
என்பவருடன் சேர்ந்து அர்ஜென்டினா விலங்குகள் பாதுகாப்பு கழகத்தை உருவாக்கியவர்.
ஒருமுறை இத்தாலியின் Gubbioவில், கொடிய ஓநாய் ஒன்று விலங்குகளை மட்டுமல்லாமல் அவ்வூர்
மக்களையும் கொன்று அச்சுறுத்தி வந்தது. இதைக் கேள்விப்பட்ட புனித பிரான்சிஸ் அசிசி தனது
துறவிகளுடன் அந்த ஓநாய் இருக்கும் காட்டுப்பகுதிக்குச் சென்று அதனை, சகோதர ஓநாயே என்று
அழைத்து, அதை அமைதிப்படுத்தி, அதற்கும் Gubbio மக்களுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை
ஒன்றை ஏற்படுத்தி நல்ல உறவையும் உருவாக்கினார் என்பது வரலாறு.