2013-10-02 16:02:08

வயது முதிர்ந்தோரின் அனுபவம் இவ்வுலகை வழிநடத்த அவசியம் - பேராயர் Zimowski


அக்.02,2013. பல்வேறு தலைமுறைகளின் சங்கமமாக விளங்கும் குடும்பமே திருஅவை; எனவே, இக்குடும்பத்தில் அனைவரும் வரவேற்பையும், பரிவையும் உணரவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அக்டோபர் 1, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட 'அனைத்துலக வயது முதிர்ந்தோர் நாளை'யொட்டி, நலவாழ்வுப் பணியாளர் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski அவர்கள் வெளியிட்டுள்ளச் செய்தியில் இவ்வாறு கூறினார்.
தற்போது 60 கோடி என்ற அளவில் உலகெங்கும் வாழும் முதியோரின் எண்ணிக்கை, இன்னும் பத்தாண்டுகளில் 100 கோடியாக உயரும் சூழ்நிலை உள்ளது என்பதை, தன் செய்தியில் சுட்டிக்காட்டும் பேராயர் Zimowski அவர்கள், வயது முதிர்ந்தோரின் அனுபவம் இவ்வுலகை வழிநடத்த அவசியம் என்பதையும் எடுத்துரைத்தார்.
ஆதாயம் தேடுவதிலும், பொருள்களைச் சேர்ப்பதிலும் நம்மை உந்தித்தள்ளும் உலகப் போக்கிலிருந்து விடுபட்டு, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் போக்கை நமது தலைமுறையினர் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் பேராயர் Zimowski தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில், முதிர்ந்த வயது, வாழ்வின் தளர்ச்சி அல்ல, மாறாக, வாழ்வின் நிறைவு என்பதை எடுத்துரைக்கும் பேராயர் Zimowski அவர்கள், நிறைவான வாழவைக் கண்டவர்களின் அனுபவம் இவ்வுலகிற்கு அவசியம் என்பதையும் கூறியுள்ளார்.

ஆதாரம் : VIS








All the contents on this site are copyrighted ©.