2013-10-02 16:02:00

அனைத்து போர்களும் அநீதிகளையும், தீமைகளையும் விளைவிக்கின்றன - பேராயர் மம்பெர்த்தி


அக்.02,2013. தனி மனிதர்கள் என்ற அளவிலும், உலக நாடுகள் என்ற அளவிலும், சந்தித்தல், உரையாடுதல் போன்ற முயற்சிகள் பயனளிக்கும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் சொற்களாலும், செயல்களாலும் வெளிப்படுத்தி வருகிறார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
செப்டம்பர் 17ம் தேதி முதல், அக்டோபர் 4ம் தேதி முடிய நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றுவரும் 68வது ஐ.நா. பொதுஅவைக் கூட்டத்தில், திருப்பீடத்தின் வெளியுறவுத்துறைச் செயலராகப் பணியாற்றும் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்கள் இவ்வாறு கூறினார்.
"2015க்குப் பிறகு நிகழவேண்டிய முன்னேற்றங்களுக்கு ஒரு தயாரிப்பு" என்ற தலைப்பில் நிகழ்ந்துவரும் இக்கூட்டத்திற்கு, திருத்தந்தை தன் வாழ்த்துக்களையும், அசீரையும் வழங்குவதாக, பேராயர் மம்பெர்த்தி அவர்கள் தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.
சிரியாவில் நிகழும் துயரங்களைக் குறித்து G20 நாடுகளின் தலைவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளதைத் தொடர்ந்து, சிரியாவில் நிலையான அமைதியை உருவாக்க, அனைத்து நாடுகளுமே உழைக்கவேண்டிய கடமையை பேராயர் மம்பெர்த்தி அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.
சிரியாவில் நிகழ்ந்துவரும் கொடுமைகளைத் தீர்க்கத் தவறியதற்கு, அனைத்துலகச் சமுதாயமும் பொறுப்பேற்கவேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் குறிப்பிட்டதையும் பேராயர் மம்பெர்த்தி அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.
அனைத்து போர்களும் அநீதிகளையும், தீமைகளையும் விளைவிக்கின்றன; எனவே, போரைத் தடுக்க அனைவரும் முயலவேண்டும் என்று கத்தோலிக்கத் திருஅவை தன் அறிக்கைகளில் கூறிவருவதை ஐ.நா. கூட்டத்தில் நினைவுருத்தியப் பேராயர் மம்பெர்த்தி அவர்கள், அமைதியும், நீதியும் நிறைந்த சமுதாயத்தில், மனித முன்னேற்றம் நிகழும் என்று தன் உரையின் இறுதியில் கூறி முடித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.