2013-10-01 15:28:44

விவிலியத்
தேடல் வீட்டுப்பொறுப்பாளர் உவமை பகுதி 4


RealAudioMP3 தனக்கென ஒரு வீடோ, காரோ இல்லாமல் பணியாற்றும் முதலமைச்சர் ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்துவைக்க விழைகிறேன். இந்தியாவில் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக 1998ம் ஆண்டு முதல் தொடர்ந்து பணியாற்றிவரும் 64 வயது நிரம்பிய திருவாளர் மானிக் சர்கார் அவர்கள், இந்திய முதலமைச்சர்கள் அனைவரிலும் மிக மிக எளிமையானவர். நேர்மையாளர்.
முதலமைச்சர் பணிக்கென இவர் பெறும் ஊதியம் அனைத்தையும் தனது மார்க்சிய கம்யூனிச கட்சிக்கு அளித்து வருகிறார். அவர்கள் இவருக்கு வழங்கும் 5000 ரூபாய் மட்டுமே இவரது மாதச் செலவாகிறது. இவரது மனைவி திருமதி பாஞ்சாலி அவர்கள் சாதாரண ரிக்க்ஷாவில் ஏறி, கடைகளுக்குச் செல்கிறார். அவருடன் தற்காப்புப் படையினர் செல்வதில்லை.
B.Com பட்டம் பெற்றுள்ள திரு.மானிக் சர்கார் அவர்கள், தன் 23வது வயதில் மார்க்சிய கம்யூனிசக் கட்சியில் உறுப்பினர் ஆனார். 1998ம் ஆண்டு முதல், 4 முறை, திரிபுராவின் சட்டமன்றத்திற்குத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர், அம்மாநிலத்தின் முதல் அமைச்சராக பணியாற்றிவருகிறார்.
2008ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன், திரு.சர்கார் அவர்கள் தன் சொத்து விவரங்களை வெளியிட்டபோது, இவரது வங்கி இருப்புத்தொகை 16,210 ரூபாய் மட்டுமே. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்வாண்டு பிப்ரவரியில் அங்கு நடைபெற்ற தேர்தலுக்கு முன் இவர் தன் சொத்து விவரங்களை வெளியிட்டபோது, இவரது வங்கி இருப்பு 10,800 ரூபாய் என்று குறைந்திருந்தது.
15 ஆண்டுகள் முதலமைச்சராகப் பணியாற்றிய ஒருவருடைய வங்கியில் சேமிப்புத் தொகை 10,800 ரூபாய் என்று கேட்கும்போது மனம் நம்ப மறுக்கிறது. கட்டாயம் இவர் வேறு வழிகளில் சொத்து சேர்த்திருப்பார் என்றும் எண்ணத் தோன்றுகிறது. 2009ம் ஆண்டு இவரது தாயின் மறைவுக்குப் பிறகு, இவருக்கு வந்து சேர்ந்த பாரம்பரியச் சொத்தான ஒரு சிறு இல்லத்தையும், வறுமையில் வாழ்ந்த தன் சொந்தங்களில் ஒருவருக்குத் தானமாக அளித்தார் என்று சொல்லப்படுகிறது. இதுவரை இவரைக்குறித்து வெளிவந்துள்ள இந்த விவரங்களில் பாதியளவு உண்மையாக இருந்தாலும், இவர் உயர்ந்ததொரு மனிதர் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

திரு மானிக் சர்கார் அவர்களைக் குறித்து ஏன் இந்த விளம்பரம் என்று நீங்கள் எண்ணினால், அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதல் காரணம்... அக்டோபர் 2ம் தேதி, நாம் கொண்டாடும் 'காந்தி ஜெயந்தி' விழா. உடுத்துவதற்கு ஒரே ஒரு துணி மட்டுமே வைத்திருக்கும் வறியோருடன் தன்னை இன்னும் அர்த்தமுள்ள வகையில் இணைத்துக்கொள்ள, தான் உடுத்தும் பாணியை மாற்றியவர் காந்தியடிகள். காந்தியடிகளை பணத்தாள்களில் அச்சிட்டு, நேர்மையற்ற பல வழிகளில் அந்த உருவம் பயன்படுத்தப்பட்டு வரும் இந்தியாவில், அவரைப்போல வாழ முற்படும் பிற உயர்ந்த உள்ளங்கள் பிறந்துள்ளனர் என்பதை நினைவுறுத்தவே திரு.சர்கார் அவர்களைப்பற்றிய இந்த விவரங்கள். இது முதல் காரணம்.
இரண்டாவது காரணம்... 'வீட்டுப்பொறுப்பாளர்' உவமையைச் சிந்தித்துவரும் நாம், 'வீட்டுப்பொறுப்பாளர்', 'நாட்டுப் பொறுப்பாளர்' என்ற ஒப்புமை வார்த்தைகளை வைத்து கடந்த வார விவிலியத் தேடலில் மேற்கொண்ட ஒரு முயற்சியின் தொடர்ச்சியாக மானிக் சர்கார் அவர்களை நாம் எண்ணிப் பார்க்கலாம்.
2014ம் ஆண்டு மேமாதத்திற்குள் இந்தியாவில் நாட்டுப் பொறுப்பாளர்களாகப் பணியாற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, திரு.மானிக் சர்காரைப் போன்று மனசாட்சியுள்ள, பொறுப்புள்ள வேட்பாளர்களைத் தேடும் முயற்சிகளைச் செய்யலாமே என்ற எதிர்பார்ப்பில், நம்பிக்கையில் நம் இன்றையத் தேடலைத் துவங்குகிறோம்.

வீட்டுப் பொறுப்பாளர் உவமையின் இறுதியில் இயேசு வழங்கும் ஒரு தீர்க்கமான, உறுதியான எண்ணம், மிகவும் புகழ்பெற்றதொரு வாக்கியமாக, பலச் சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது. இயேசு கூறிய திட்டவட்டமான எச்சரிக்கை இதுதான்:
நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது. (லூக்கா 16: 13)
இயேசு தந்த இந்த எச்சரிக்கைக்கு பரிசேயர் தந்த பதிலிறுப்பை நற்செய்தியாளர் லூக்கா அடுத்த வரிகளில் குறிப்பிட்டுள்ளார். பண ஆசைமிக்க பரிசேயர் இவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை ஏளனம் செய்தனர். (லூக்கா 16:14) என்று வாசிக்கிறோம்.
பரிசேயர் இயேசுவை ஏளனம் செய்தனர் என்பதை வாசித்ததும், அவர்கள் கொண்டிருந்த அகந்தையை எண்ணி, அவர்கள்மீது கோபம் கொள்கிறோம் அல்லது அவர்கள் அறியாமையை எண்ணி பரிதாபப்படுகிறோம். அவர்கள் ஏன் ஏளனம் செய்தனர் என்பதைப் புரிந்துகொள்வது நமக்குப் பயனளிக்கும். அவர்களையொத்த மனநிலை நம்மிடம் அவ்வப்போது தலைகாட்டுகிறதா என்ற ஆய்வையும் நாம் மேற்கொள்ளவேண்டும்.

செல்வம் இறைவனிடமிருந்து வரும் கொடை; ஏழ்மையோ இறைவன் தரும் சாபம் என்ற எண்ணத்தில் சிறுவயது முதல் வளர்க்கப்பட்டவர்கள் பரிசேயர்கள். அவர்களுக்கு இத்தகைய எண்ணங்களைத் தந்தவர்களில் ஒருவர் மன்னன் சாலமோன். குறிப்பேடு இரண்டாம் நூல் 9:22ல் நாம் காண்பதுபோல், செல்வத்திலும் ஞானத்திலும் அரசர் சாலமோன் உலகின் மற்ற மன்னர்களைவிடச் சிறந்து விளங்கினார்.
செல்வத்தையும், ஞானத்தையும் அளவற்ற முறையில் பெற்றிருந்த சாலமோன் வழங்கிய நீதிமொழிகளில் ஒன்று செல்வத்தை இறை ஆசியோடு இணைத்துப் பேசுகிறது:
நீதி மொழிகள் 10: 22
ஆண்டவரின் ஆசி செல்வம் அளிக்கும்: அச்செல்வம் துன்பம் கலவாது அளிக்கப்படும் செல்வம்.

இறைவனின் ஆசியால் செல்வச் செழிப்பில் வாழ்ந்த சாலமோனைக் குறித்து பழைய ஏற்பாட்டின் இரு நூல்களில் விரிவான விவரங்கள் கூறப்பட்டுள்ளன. நேரம் கிடைத்தால் இவ்விரு பகுதிகளில் ஏதாவது ஒன்றை வாசித்துப் பாருங்கள்: அரசர்கள் முதல் நூல் 10: 14-29; குறிப்பேடு 2ம் நூல் 9: 13-28 என்பன இவ்விரு பகுதிகள். ஏறத்தாழ ஒரே எண்ணங்கள் இவ்விரு பகுதிகளிலும் கூறப்பட்டுள்ளன. சாலமோனின் செல்வத்தைக் குறித்து அரசர்கள் முதல் நூலில் கூறப்பட்டுள்ள விவரங்களிலிருந்து ஒரு சில வரிகள்:
அரசர்கள் முதல் நூல் 10: 14,15,18,21
சாலமோனுக்கு ஆண்டுதோறும் வந்து கொண்டிருந்த பொன்னின் நிறை ஏறத்தாழ இருபத்தி ஏழாயிரம் கிலோ. அதைத் தவிர, அவரிடம் வியாபாரிகளும், வணிகர்களும் அரபு நாட்டு அரசர்கள் அனைவரும் உள்நாட்டு ஆளுநர்களும் பொன் கொண்டு வருவதுண்டு. அரசர் தந்தத்தினால் பெரியதோர் அரியணை செய்து அதைப் பசும்பொன்னால் வேய்ந்தார். சாலமோன் அரசரின் பான பாத்திரங்கள் எல்லாம் தங்கத்தாலும்...பசும் பொன்னாலும் ஆனவை. ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை: சாலமோனின் காலத்தில் வெள்ளியை யாரும் உயர்வாக மதிக்கவில்லை.

உலக மன்னர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் என்று கருதப்பட்ட சாலமோனின் புகழுக்கு மணிமகுடமாக விளங்கியது, அவர் எழுப்பிய எருசலேம் கோவில். சாலமோனின் நீதி மொழிகளையும், அவர் எழுப்பிய கோவிலையும் அடிப்படையாகக் கொண்டு, தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்ட பரிசேயர்கள், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, எள்ளி நகையாடியதில் ஆச்சரியமில்லையே.

ஆனால், சாலமோனின் வாழ்விலிருந்தும், வார்த்தைகளிலிருந்தும் பரிசேயர்கள் தங்களுக்குச் சாதகமாக அமைந்த ஒரு சில பகுதிகளையே மனதில் பதித்தனர். செல்வச் செழிப்பால் சாலமோன் வாழ்வில் நிகழ்ந்தவற்றையும், அதன் விளைவாக சாலமோன் வழங்கிய அறிவுரைகளையும் அவர்கள் முழுமையாகச் சிந்தித்திருந்தால், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு ஏளனம் செய்திருக்க மாட்டார்கள்.

சாலமோனின் சிறப்பு என்று அரசர்கள் முதல் நூல் 10ம் பிரிவில் நாம் காணும் பகுதியைத் தொடர்ந்து, 11ம் பிரிவில் சாலமோன் வெற்றுத் தெய்வங்களை வழிபடல் என்ற பகுதி கூறப்பட்டுள்ளது. அதேபோல், அவரதுச் செல்வச் சிறப்பைக் கூறும் குறிப்பேடு 2ம் நூலின் 9ம் பிரிவின் இறுதியில் சாலமோனின் இறப்பு கூறப்பட்டுள்ளது.
ஞானத்திற்கு ஓர் இலக்கணமாக வாழ்ந்த சாலமோனே மிகுதியான செல்வம் தன்னைச் சூழ்ந்தபோது, நிலைதடுமாறினார். துன்பங்களை அடுக்கடுக்காகச் சந்தித்தார். கடவுளைக் காணமுடியாதவாறு செல்வம் தன்னைப் பார்வையிழக்கச் செய்தது என்பதை அவர் உணர்ந்தார். செல்வம் இறைவனின் ஆசி என்று சாலமோன் கூறியதை நீதிமொழிகள் நூல் 10ம் பிரிவில் கேட்டோம். அதே நீதிமொழிகள் நூல் 15ம் பிரிவில் சாலமோன் கூறும் வார்த்தைகள் வேறுபட்டு ஒலிக்கின்றன. இறைவனுக்கு முன் செல்வத்தின் உண்மை மதிப்பு என்னவென்று சாலமோன் கூறும் அறிவுரை இதோ:
நீதிமொழிகள் நூல் 15:16
பெருஞ்செல்வமும் அதனோடு கவலையும் இருப்பதைவிட, சிறுதொகையும் அதனோடு ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமும் இருப்பதே மேல்.

'கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது' (லூக்கா 16:13) என்று இயேசு கூறிய தீர்க்கமான எச்சரிக்கை, குறிப்பாக அவரது சீடர்களுக்கும், அவரைச்சுற்றி அமர்ந்திருந்த மக்களுக்கும் என்பதை உணரலாம். செல்வத்திற்குப் பணிவிடை செய்யும் ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்ள இயேசு கூறும் ஓர் ஆலோசனை இவ்விதம் ஒலிக்கிறது:
"நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்போது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள்" (லூக்கா 16: 9) நிலையான உறைவிடங்களில், அதாவது, நிலைவாழ்வில் நம்மை வரவேற்கக் காத்திருக்கும் நண்பர்கள் யார்? அவர்கள் எப்போதுமே நம்மைச் சுற்றியுள்ள ஏழைகளே என்பதை ஓர் உவமை வழியாக இயேசு கூறியுள்ளார். 'செல்வரும் இலாசரும்' என்ற மிகப் புகழ்பெற்ற உவமையில் நம் தேடலை அடுத்த வாரம் துவங்குவோம்.







All the contents on this site are copyrighted ©.