திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தாலிய நாளிதழுக்கு அளித்த பேட்டி
அக்.,01,2013. திருஅவையில் மாற்றம் கொண்டுவருவதற்கு தான் முயற்சிப்பதாகவும், இதன்மூலம்
திருஅவை, மீண்டும் இறைமக்களின் சமூகமாக மாறும் எனவும் La Repubblica என்ற இத்தாலிய தேசிய
நாளிதழுக்கு அளித்த தனிப்பட்ட நேர்காணலில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆன்மாக்களைக்
கவனிக்கும் பொறுப்பைக் கொண்டிருக்கும் ஆயர்களும் குருக்களும் மேய்ப்பர்களும் இறைமக்களின்
சேவையில் தங்களை அர்ப்பணிக்கும் இடமாக இறைமக்களின் சமூகம் அமையும் என்றும் இந்நேர்காணலில்
மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். La Repubblica நாளிதழின் நிறுவனர் Eugenio
Scalfari என்பவர், கடந்த செப்டம்பர் 24ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் நடத்திய
நேர்காணல் அக்டோபர் 1, இச்செவ்வாய்க்கிழமை இதழில் வெளியாகியுள்ளது. இது மூன்று பக்கங்களைக்
கொண்ட நீண்ட நேர்காணலாகும். திருஅவையின் பணி மதம் மாற்றும் பணியல்ல, மாறாக, மக்களின்
தேவைகள், ஆசைகள், ஏமாற்றங்கள், மனச்சோர்வுகள், நம்பிக்கைகள் ஆகியவற்றுக்குச் செவிமடுப்பதாகும்
என்றும் Scalfariயிடம் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 800 ஆண்டுகளுக்கு முன்னர்
புனித பிரான்சிஸ் அசிசியால் வித்திடப்பட்ட மறைபோதக மற்றும் ஏழைத் திருஅவை இக்காலத்துக்கு
இன்னும் அதிகமாகத் தேவையாக இருக்கின்றது, இளையோரிடையே நம்பிக்கையை நிலைநாட்டவும், முதியோருக்கு
உதவவும், வருங்காலம் நோக்கிக் கதவுகளைத் திறக்கவும், அன்பைப் பரப்பவும் இத்தகையத் திருஅவை
அவசியம் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். ஒதுக்கப்பட்டவர்கள் உட்பட ஏழைகள்
மத்தியில் ஏழையாக இருக்கும் திருஅவையும், அமைதியைப் போதிக்கும் திருஅவையும் தேவை என்பதையும்
வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். கிறிஸ்தவர்கள் வாழ்வு மற்றும் அன்பின்
புளிக்காரமாக இருக்க வேண்டுமென்றும், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாக இருப்பதே ஒரு பலம்
என்றும் La Repubblica நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.