2013-10-01 16:52:13

சட்டங்களினால் மட்டும் நாட்டை மாற்றிவிட முடியாது, மானாகுவா துணை ஆயர்


அக்.,01,2013. மத்திய அமெரிக்க நாடான நிக்கராகுவாவில் சட்டங்களினால் மட்டும் நாட்டை மாற்றிவிட முடியாது, மாறாக நாட்டினர் அனைவரும் மாற வேண்டுமென்று தலைநகர் மானாகுவா துணை ஆயர் Silvio Baez இத்திங்களன்று கூறினார்.
இளையோர் மற்றும் குடும்பங்கள் மத்தியில் உண்மையான விழுமியங்கள் பரப்பப்பட்டால் மட்டுமே நாட்டில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் ஒழியும் என்று, Masaya நகரில் அந்நகரின் பாதுகாவலர் புனித எரோணிமுஸ் விழாவைச் சிறப்பித்த பின்னர் கூறினார்.
நிக்கராகுவா பாராளுமன்றத்தில் சட்ட அமைப்பாளர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த சட்டங்களில் அண்மையில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்துக் குறிப்பிட்ட ஆயர் Baez அவர்கள், நிக்கராகுவா, சட்டங்களாலும், விதிமுறைகளாலும் மாறாது, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், கடுமையான சட்டங்களால் மாறாது என்று கூறினார்.
நல்லதொரு நாட்டை உருவாக்க விரும்பினால், ஒவ்வொருவருக்குள்ளிருந்தும் மாற்றம் ஏற்பட வேண்டுமென்று ஆயர் குறிப்பிட்டார்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.