2013-10-01 15:26:34

கற்றனைத் தூறும் : காந்தி ஜெயந்தி - அகில உலக அகிம்சை நாள்


இந்திய அரசியல் வரலாற்றில் கண்ணியமான காலடித் தடங்களைப் பதித்துச்சென்ற மூவரை எண்ணி நாம் பெருமையுடன் தலைநிமிரும் நாள் அக்டோபர் 2ம் தேதி. அக்டோபர் 2, இப்புதனன்று, மகாத்மா காந்தி அவர்களின் 144வது பிறந்தநாள். ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 2ம் தேதியை ‘காந்தி ஜெயந்தி’ எனக் கொண்டாடுகிறோம்.
இதே அக்டோபர் 2ம் தேதி 1904ம் ஆண்டு பிறந்தவர் லால் பகதூர் சாஸ்திரி. காந்தியின் எண்ணங்களால் ஈர்க்கப்பட்டு, நாட்டுக்காகத் தன்னையே அர்ப்பணித்தவர் இவர். இதே அக்டோபர் 2ம் தேதி 1975ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தவர் கர்மவீரர் காமராஜ். ஏழ்மை காரணமாக பள்ளிக்குச் செல்லமுடியாத காமராஜ் அவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றியபோது, ஏழைக் குழந்தைகள் கல்வி கற்க உதவியாக, அவர்களுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
காந்தியின் பிறந்தநாள், கடந்த சில ஆணடுகளாக, 'அகில உலக அகிம்சை நாள்' என்றும் கொண்டாடப்படுகிறது. உலக அமைதிக்கென நொபெல் பரிசுபெற்ற ஈரான் நாட்டு Shirin Ebadi என்ற பெண் வழக்கறிஞர், காந்தி பிறந்த நாளை வன்முறைகளற்ற உலக நாளாக ஐ.நா. அறிவிக்கவேண்டுமென்று, 2004ம் ஆண்டு ஒரு முயற்சியைத் துவக்கினார். இம்முயற்சி, தென் ஆப்ரிக்கப் பேராயர் Desmund Tutu போன்றோரின் ஆதரவோடு, 2007ம் ஆண்டு ஐ.நா.வின் அறிக்கையாக வெளியானது.
அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்பட்டாலும், லால் பகதூர் சாஸ்திரி மற்றும் காமராஜ் ஆகியோரையும் பெருமையுடன் எண்ணிப் பார்க்கிறோம். இந்திய அரசியல் வரலாற்றில் அக்டோபர் 2ம் தேதி புண்ணியம் செய்த ஒரு நாள்.

ஆதாரம் : wikipedia / tamil.culturalindia.net








All the contents on this site are copyrighted ©.