2013-09-30 16:28:47

வாரம் ஓர் அலசல் – காது கொடுத்துக் கேளுங்கள்


செப்.,30,2013 RealAudioMP3 . அந்த ஊரில் அந்த மனிதர் அதிகாலையில் எழுவார், ஆற்றுக்குப் போவார், குளிப்பார், அப்படியே அருகில் இருக்கும் ஆலயத்துக்கும் செல்வார், ஆண்டவனைத் தொழுவார், தன்னுடைய தேவைகளைச் சொல்லி முறையிடுவார். இவை அவருடைய அன்றாட வேலை. இதைத் தொடர்ந்து கவனித்துவந்த பெரியவர் ஒருவர் அந்த மனிதரைக் கூப்பிட்டு தனதருகில் அமரவைத்து நான் ஒரு கதை சொல்கிறேன் கேட்கிறாயா? என்று கேட்டார். சொல்லுங்கள் பெரியவரே, கேட்கிறேன் என்று அவர் சொன்னவுடன், பெரியவரும் கதை சொல்ல ஆரம்பித்தார்.
ஓர் ஊரில் தத்துவ ஞானி ஒருவர் இருந்தார். அவர் காலுக்குச் செருப்புக்கூட அணிவதில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து தினமும் கடைத்தெருவுக்குச் செல்வார். ஒவ்வொரு கடையாக நின்று பார்ப்பார். அங்கே என்னென்ன பொருள்கள் விற்பனையாகின்றன என்று கவனிப்பார். எதையுமே வாங்காமல் திரும்பி வந்துவிடுவார். இதைக் கவனித்த அவருடைய நண்பர் கேட்டார்.. ‘நீங்கள் ஏன் தினமும் கடைவீதிக்குப் போகிறீர்கள்? அங்கே என்னென்ன பொருள்கள் விற்பனையாகின்றன என்று கவனிப்பதற்காகவா? ஆனாலும் நீங்கள் எதையுமே வாங்குவதில்லையே?’ என்று. அதற்கு அந்த ஞானி, ஆமாம் என்றார். அப்புறம் எதற்காக வீணாக அங்கே போக வேண்டும்? என்று கேட்டார் நண்பர். அங்குள்ள பொருள்களில் எத்தனை பொருள்கள் இல்லாமல் நான் நிறைவோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள்வதற்காக... என்று பதில் சொன்னார் ஞானி.
இப்படி அந்தப் பெரியவர் அந்த மனிதருக்குக் கதையைச் சொல்லி முடித்தார். இக்கதையைக் கேட்ட அந்த மனிதர் அவரிடம், அது சரி, இந்தக் கதையை எதற்காக என்னிடம் சொன்னீர்கள்? எனக் கேட்டார். உமக்கு ஓர் உண்மை புரிய வேண்டும் என்பதற்காகத்தான் என்று பெரியவர் பதில் சொன்னார். அது என்ன உண்மை என அந்த மனிதர் கேட்க, பெரியவர் சொன்னார்.. ஆன்மீகம் என்பது உமக்கு என்ன தேவை என்று அறிவது அல்ல. மாறாக, உமக்கு தேவையற்றது எது என்பதைப் புரிந்துகொள்வது என்று. ஆம். அன்பு நேயர்களே, இன்றைய விளம்பர உலகம், அது தேவை இது தேவை என்று கவர்ச்சி வார்த்தைகளை அள்ளி வீசுகிறது. அதைக் கேட்கும் மக்களும், பொருள்களிலும் செல்வத்திலும் மனத்தைப் பறிகொடுத்து சிறிது காலத்தில் வாழ்வில் ஒரு வெறுமையை, ஒருவித விரக்தியை அடையத் தொடங்கி விடுகின்றனர். ஆடம்பரங்களே வாழ்க்கையாகிவிட்ட வாழ்வில் ஆண்டவனுக்கு இடமில்லாமல் போய்விடுகின்றது. தந்தத்தாலான கட்டில்களும் பஞ்சு மெத்தைகளும் சொகுசு பங்களாக்களும் இவர்களுக்கு நிம்மதி கொடுப்பதில்லை. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், கடவுள் பற்றிய நினைவே இல்லாத வாழ்வில், தான், தனது வசதிகள், தான் வைத்திருக்கும் பொருள்கள் பற்றிய நினைவே நிறைந்திருக்கும் என்று இஞ்ஞாயிறன்று சொன்னார். வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் ஒன்றரை இலட்சத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளுக்கு இஞ்ஞாயிறன்று நிகழ்த்திய திருப்பலியில், இவ்வுலகப் பொருள்களும், பணமும், கடவுளற்ற போக்கும் நமது வாழ்வை ஆக்ரமிக்கும்போது, அவை நமது வாழ்வை அபகரித்துக்கொள்ளும். மனிதர் என்ற தனித்துவத்தையே, மனிதர் என்ற முகத்தையே நாம் இழக்கச் செய்துவிடும். எல்லாம் தான் என்ற கோட்பாட்டைச் சுற்றியே வந்து விடுகின்றது என்று சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ்.
RealAudioMP3 இஞ்ஞாயிறன்று மட்டும் ஊடகங்களில் வெளியான ஒருசில செய்திகளை வாசிக்கும்போது மனிதரின் வாழ்வில் கடவுளுக்கு இடமில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது. அக்டோபர் 2, வருகிற புதன், அனைத்துலக அஹிம்சை தினம். அஹிம்சையை உலகுக்குப் போதித்த காந்திஜி பிறந்த இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியில், இராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் அப்பாவி நபர் ஒருவர் காயமடைந்தார். கடந்த வியாழனன்று சம்பா பகுதியில் இராணுவ முகாம் மற்றும் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் மூன்று பேர் தாக்குதல் நடத்தியதில் இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 10 பேர் பலியாயினர். தமிழகத்தில் உரிமை கேட்டுப் போராட்டம் நடத்திய பார்வையற்ற கல்லூரி மாணவர்கள்மீது காக்கிகள் தங்களது வீரத்தைக் காட்டிய காட்சி கண்டவர் மனதைப் பதைபதைக்கச் செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் என்ற ஊரில் இரண்டேகால் ஏக்கர் நிலத்துக்காக ஐம்பது வருடப் பகை, பங்காளிகளுக்குள் அடிதடி கலவரம், வழக்கறிஞர்-காவல்துறையினர் மோதல், கொடூரமாக ஒரு கொலை ... இன்னும் பல வன்முறைகள்...
வடகிழக்கு நைஜீரியாவின் Yobe மாநிலத்தில் வேளாண்மைக் கல்லூரியில் உறங்கிக்கொண்டிருந்த மாணவர்கள்மீது சந்தேகத்துக்குரிய இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 மாணவர்கள்வரை கொல்லப்பட்டுள்ளனர். இவ்வன்முறையாளர்கள் வகுப்பறைகளுக்குத் தீ வைத்துள்ளனர். வடமேற்கு பாகிஸ்தானில் Peshawar நகரின் பொதுச்சந்தையில் குண்டுவெடிப்புத் தாக்குதலில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். ஈராக்கின் பாக்தாத் மசூதியில் இடம்பெற்ற வாகன குண்டுவெடிப்புகளில் குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.
இப்படி நாடுகளில் இடம்பெறும் வன்முறைகளையும் நெருக்கடிகளையும் நோக்கும்போது மனிதரின் வாழ்வில் கடவுள் எங்கே? மனிதர் கடவுள் சிந்தனையுடனும், கடவுள் பற்றுடனும் வாழ்கிறார்களா? என்ற கேள்விகள் எழுகின்றன. அந்தக் குடும்பத்தில் அப்பா சிறந்த மேடைப் பேச்சாளர். அவருடைய பேச்சைக் கேட்டுப் பலர் பாராட்டினர். ஆனால் அவரது குடும்பத்தில் கசப்பான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. வயதான அவரது தாய் கர்ப்பமாக இருக்கும் அதிர்ச்சி அந்தக் குடும்ப கவுரவத்தையே அசைத்துப் போட்டது. அவரது வயதான அப்பா அப்பொழுதான் இறந்திருந்தார். வெளியே தெரியாமல் வீட்டுக்குள்ளே அடைத்து வைத்திருந்த நிறைமாதக் கர்ப்பிணித் தாயை அன்று அவர் அழைத்துக்கொண்டு சமூகசேவை இல்லங்கள் ஒவ்வொன்றாக ஏறி இறங்கினார். யாரும் அத்தாயை ஏற்க முன்வரவில்லை. தனது வீட்டில் வைத்தால் தனக்கு அவமானம் என்று சொல்லி அவரின் ஒரே தம்பியும் தனது தாயை ஏற்கவில்லை. அவரின் மனைவியின் நச்சரிப்பு இன்னொருபுறம். முடிவில் தனது தாயை காரில் அழைத்துச்சென்று ஒதுக்குப்புறமான ஓரிடத்தில் இறக்கிவிட்டு நிறையப் பணக் கட்டுகளை அத்தாயின் பாதத்தில் வைத்தார் அவர். நிலைமையைப் புரிந்துகொண்ட அந்த வயதான கர்ப்பிணித் தாய், கதறிக் கதறி அழுதுகொண்டிருக்க அவரும் அழுதுகொண்டே காரில் தனியே வீடுவந்து சேர்ந்தா RealAudioMP3 ர். சில வருடங்கள் கழித்து அவர் ஒருநாள் சொற்பொழிவாற்றினார். நீங்கள் யாராவது கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா, நம்ம வீட்டிலே இருக்காங்க, முதலில் நம்மைப் பெற்றவர்கள். பின்னர் நாம் பெற்ற பிள்ளைகள். இதைப் புரிந்து நடந்தால் நல்ல குடும்பம் அமையும், நல்ல குடும்பம் அமைந்தால் நல்ல சமுதாயம் அமையும் என்று சொல்லி உரையை முடித்தார். கைதட்டும் வாங்கினார். ஆனால் அவர் வெளியில் வந்ததும் அவரைப் பாராட்டிய ஓர் இளம் தாய் தனது மகள் அவருக்கு ஒரு பரிசு கொடுக்க விரும்புவதாகச் சொன்னார். அந்தப் பேச்சாளரும் அதை ஆவலோடு வாங்கினார். ஆனால் அந்தப் பரிசு, அவர் தனது வயதான கர்ப்பிணித் தாயின் காலடியில் வைத்துவிட்டுவந்த பணக்கட்டுகள். அந்தப் பெண் குழந்தை தனது தாய் பிரசவித்த பிள்ளை. RealAudioMP3 இது ஓர் உண்மைச் சம்பவம் என்று நான் பார்த்த அந்தக் குறும்படத்தில் எழுத்துக்கள் ஓடிக்கொண்டிருந்தன.
ஆம். கடவுள் நம்மைப் பெற்றவர்கள் வடிவில் வருகிறார். அவர் வயதான நமது பெற்றோர் உருவில் தம்மை நமக்குக் காட்டுகிறார். அக்டோபர் 1, இச்செவ்வாய் அனைத்துலக முதியோர் தினம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொல்லியிருப்பதுபோல முதியோரும் இளையோரே. வயதில் அல்ல, தங்களது அனுபவ ஞானத்தைச் சொல்லிக்கொடுப்பதில் அவர்கள் இளையோர். “நாம் விரும்பும் வருங்காலம் : முதியோர் என்ன சொல்கிறார்கள்” என்ற தலைப்பில் இவ்வாண்டின் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. முதியோர் சமூகத்துக்குச் செய்துள்ள செயல்களையும், முதியோரின் வாழ்வும், செயல்களும் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களையும் எண்ணிப் பார்ப்பதற்கு இந்நாள் அழைக்கின்றது. இன்றைய இளையோர் நாளைய முதியோர் என்பது ஏனோ அடிக்கடி மறக்கப்படுகின்றது.
நாம் நமது வாழ்வில் கடவுளை மனதார நினைத்தால், நமது வாழ்வும் பிறரும், உலகமும் என எல்லாமுமே எதார்த்தமாகத் தெரியும். நமது வயதான பெற்றோர் உட்பட எந்த மனிதரும் பயன்படுத்தப்படும் பொருளாக நோக்கப்படமாட்டார்கள். நாம் செய்யும் செயல்களையும், பேசும் ஒவ்வொரு சொல்லையும் கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் மறையாது இருக்கும்போது நமது வாழ்வு புனிதமாக அமையும். அப்போது அப்பாவிகளை அழிக்க வேண்டுமென்ற எண்ணம் உதிக்காது. பிறர்பற்றி இல்லாதது பொல்லாதது பேசி பிறரது பெயரைக் கெடுக்க வேண்டுமென்ற எண்ணம் மறையும்.
பலாப்பழத்தின் தோல் சொர சொரப்பானது. ஆனால் அதற்குள்ளேயிருக்கும் பழம் சுவையானது. நெல்லின் மேல்தோல் சொர சொரப்பானது. ஆனால் அதற்குள்ளேயிருக்கும் அரிசி உயிரினத்துக்கு மிகவும் அவசியமானது. இவற்றின் மேல்தோலை நீக்கி அவற்றினுள்ளே இருப்பவற்றை நாம் பயன்படுத்துகிறோம். அதேபோல் எல்லாவற்றிலும், எல்லாரிலும் நல்லதையே பார்த்து எப்பொழுதும் நல்லதையே பேசினால் எல்லாரும் கடவுளின் பிள்ளைகள் என்ற நற்சிந்தனை நம்மில் உருவாகும்.
பொருள்கள் சிதறிக்கிடக்கும் வீட்டு அறை ஒன்றில் இரவில் நுழையும்போது அங்கு விளக்கு எரிந்தால்தான் நாம் தடுமாறாமல் நடக்க முடியும். விளக்கு எரிந்தும் சுவரில் போய் மோதிக்கொண்டால் அது விளக்கின் தவறல்ல. அதேபோல் நமது வாழ்விலும் கடவுள் அணையா விளக்காய் இருந்து வழிகாட்டுகிறார். அந்த விளக்கு எரிந்தும் அதன் ஒளியை புறக்கணிக்காமல் விழிப்புடன் நாம் இருந்தால் இறைவன் துணையை என்றும் உணரலாம். நமது மனம் பண்பட்டுவிட்டால், கடவுள் பற்றிய சிந்தனை நிரந்தரமாகிவிட்டால் நம் வாழ்வில் வீணான பயமும் கவலைகளும் நம்மை வதைக்காது. நாம் கண்கலங்கி அவரைக் கூப்பிட்டால் தாமாகவே வந்து அருள் பொழிவார். இந்த நற்சிந்தனைகளைக் காது கொடுத்துக் கேட்டு அவற்றை வாழ்வாக்குவோம். கடவுள் பற்றிய நினைவுகள் நம் வாழ்வை நிறைக்கட்டும்.







All the contents on this site are copyrighted ©.