2013-09-30 17:22:25

திருத்தந்தையின் ஞாயிறு மறையுரையும், மூவேளை செப உரையும்


செப்.30,2013. கடவுளைப்பற்றிய நினைவுகள் இல்லையெனில் அனைத்தும் சுயநலமுடையதாகவும், தன் சுகங்கள் பற்றியே சிந்திக்கும் மனதுடையதாகவும் மாறிவிடும் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
விசுவாச ஆண்டையொட்டி வத்திக்கான் நகரில் இடம்பெற்ற கருத்தரங்கில் பங்குபெற உலகமனைத்திலிருந்தும் வந்திருந்த வேதியர்களுக்கு இஞ்ஞாயிறன்று உரோம் நகர் தூய பேதுரு பேராலய வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன் குறித்த நினைவுகளை மற்றவர்களில் தூண்டவேண்டியது வேதியர்களின் கடமை என்றார்.
திருஅவைக் கோட்பாடுகளை அதன் முழுமைத்தனமையோடு, அதிலிருந்து எதுவும் குறைக்காமலும், அதனோடு எதையும் இணைக்காமலும் அறிவிக்கவேண்டிய கடமைகளையும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
இறைவனைக்குறித்த நினைவுகள் இல்லா நிலையில், வாழ்வும், உலகும், அதன் மக்களும் செயற்கையானதுபோல் மாறி, சுயநலம் ஒன்றே அங்கு தேங்கி நிற்பதாக தோற்றமளிக்கும் எனவும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்த திருப்பலியில், இறைவனைக் குறித்த நினைவுகளை போற்றி பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
திருப்பலியின் இறுதியில் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளோடு இணைந்து நண்பகல் மூவேளை செபத்தைச் செபித்தத் திருத்தந்தை வழங்கிய உரையில், அத்திருப்பலியில் பங்குபெற்ற அந்தியோக்கியாவின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை பத்தாம் Youhanna அவர்களை வாழ்த்தியதோடு, சிரியா மற்றும் மத்திய கிழக்குப்பகுதியின் அமைதிக்காக செபிக்கவேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
1947ம் ஆண்டு திருமறைக்காகக் கொல்லப்பட்ட குரோவேசிய மறைமாவட்ட குரு Miroslav Bulešić, கடந்த சனிக்கிழமையன்று முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டது பற்றியும் தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பலவீனமானவர்களும் உறுதியான சாட்சிகளாக விளங்க பலத்தை வழங்கும் இறவனைப் புகழ்வோம் என மேலும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.