2013-09-28 15:22:33

திருத்தந்தை பிரான்சிஸ் : பிறர் பற்றி நல்லதையே பேச வேண்டும்


செப்.,28,2013. புனித மிக்கேல் அதிதூதரைப் பாதுகாவலராகக் கொண்டுள்ள திருப்பீட மற்றும் வத்திக்கான் காவல்துறையினருக்கு வத்திக்கான் தோட்டத்தில் இச்சனிக்கிழமையன்று திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், அலகையின் மொழியான பிறரைப் பற்றித் தவறாகப் பேசுவதற்கு எதிரான போரில் நாம் வெற்றி காண வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
பிறரைப் பற்றி ஒருபோதும் அவதூறு பேசாமலும், புறம்பேசுதலுக்கு ஒருபோதும் நம் காதுகளைத் திறவாமலும் இருப்பதற்கு, புனித மிக்கேல் அதிதூதரிடம் வரம் கேட்போம் என்று அக்காவல்துறையினரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நமது எல்லாப் பகைவரிடமிருந்து நம்மைக் காப்பாற்றுமாறு புனித மிக்கேல் அதிதூதரிடம் செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை, வத்திக்கானை எடுத்துக்கொள்வதற்கு ஆயுதம் ஏந்தியப் போர் நடத்துவது இனி எளிதல்ல, நெப்போலியன் இனிமேல் வரமாட்டார், ஆயினும், ஒளிக்கு எதிரான இருளின் போரும், பகலுக்கு எதிரான இரவின் போரும் இங்கு நடக்கிறது என்றும் கூறினார்.
வத்திக்கானில் வாழ்கின்ற மற்றும் வேலை செய்கின்றவர்களின் ஒற்றுமையைக் குலைப்பதற்குச் சாத்தான் வேலை செய்யும், ஆயுதங்கள் இல்லாத ஓர் ஆன்மீகப்போரை உள்ளுக்குள்ளே உருவாக்கச் சாத்தான் முயற்சிக்கும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இவ்வகையான போரின் ஆயுதம் மொழியாகும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், வத்திக்கானில் தடை செய்யப்பட்ட மற்றும் வத்திக்கானில் பேசக்கூடாத மொழியான புறணி பேசக்கூடாது, இவ்வாறு பேசுவது தீயவனின் வேலை, எனவே பிறர் பற்றி மோசமானதைப் பேசாமல், நல்லதையே பேசுவோம் எனக் கேட்டுக்கொண்டார்.
திருப்பீட மற்றும் வத்திக்கான் காவல்பணியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.