உரையாடல் மூலமே பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமன்பதில் திருத்தந்தை பிரான்சிஸ்
உறுதியாக உள்ளார்
செப்.,28,2013. மத்திய கிழக்குப் பகுதி, சிரியா, லெபனன் ஆகிய பகுதிகளில் போரினால் அல்ல,
மாறாக, உரையாடல் மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
உறுதியாக இருப்பதை தான் உணர்ந்ததாகத் தெரிவித்தார் அந்தியோக்கியா மற்றும் அனைத்து கீழை
நாடுகளின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை 10ம் Youhanna Yazigi. திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த பின்னர் வத்திக்கான்
வானொலிக்குப் பேட்டியளித்த முதுபெரும் தந்தை 10ம் Youhanna, மத்திய கிழக்குப் பகுதி,
சிரியா, லெபனன் ஆகிய பகுதிகளின் திருஅவைகள் மற்றும் மக்கள்மீது திருத்தந்தை பிரான்சிஸ்
மிகுந்த கரிசனை கொண்டுள்ளார் எனவும் கூறினார். சிரியாவிலும், பிற பகுதிகளிலும் அமைதி
இடம்பெறுவதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நடத்திய ஒரு நாள் உண்ணாநோன்பு மற்றும்
செப வழிபாட்டை மறக்க இயலாது எனவும், இச்செப வழிபாட்டில் தங்கள் சபையினர் அனைவரும் கலந்து
கொண்டோம் எனவும் முதுபெரும் தந்தை 10ம் Youhanna கூறினார். சிரியாவில் கடத்தப்பட்டுள்ள
தனது சகோதர ஆயர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.