2013-09-26 15:40:50

வாழ்வு மிகவும் புனிதமானது, அதைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை - நைரோபி பேராயர்


செப்.26,2013. வாழ்வு மிகவும் புனிதமானது, எனவே அதனை மதிப்பதற்கு மட்டுமே நாம் அழைக்கப்பட்டுள்ளோம், வாழ்வைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று நைரோபி பேராயர் கர்தினால் John Njue கூறினார்.
கடந்த சனிக்கிழமையன்று நைரோபியின் ஒரு வர்த்தக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றோரை இப்புதனன்று இரு மருத்துவமனைகளில் சென்று சந்தித்த பேராயர் இவ்வாறு கூறினார்.
அடிப்படைவாதக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலைத் தொடர்ந்து, கென்யாவின் இராணுவம் வர்த்தக வளாகத்தில் நுழைந்து, நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது என்று கென்யா அரசு அறிவித்துள்ளது.
அர்த்தமற்ற இந்த வன்முறை, இஸ்லாமியக் கொள்கைகள், படிப்பினைகள் அனைத்திற்கும் முரணானது என்று SUPKEM எனப்படும் கென்யா உயர்மட்ட இஸ்லாமியக் குழு ஒன்று அறிக்கை விடுத்துள்ளது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.