2013-09-26 15:37:25

லெபனான், சிரியா, புனிதபூமி ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயர்களுடன் திருத்தந்தையின் கூட்டுத் திருப்பலி


செப்.26,2013. கடவுள் நம்மை என்றும் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையை ஆயர்களாகிய நாம் மக்களுக்கு இடைவிடாமல் வழங்கக் கடமைப்பட்டுள்ளோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இப்புதனன்று, புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் காலை திருப்பலியாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் முன் தலைகுனிந்து நிற்பது, இறைவனின் கருணையைத் தொடர்ந்து வேண்டுவது, ஆண்டவரிடம் முழு நம்பிக்கை கொள்வது என்ற மூன்று கருத்துக்களில் தன் மறையுரையை வழங்கினார்.
கீழை வழிபாட்டு முறை திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Leonardo Sandri, அந்தியோக்குவின் மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் Bechara Boutros Rai, ஆகிய இருவரும், திருத்தந்தையுடன் நிறைவேற்றியத் திருப்பலியில், லெபனான், சிரியா, புனிதபூமி ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த பல ஆயர்களும் கூட்டுத் திருப்பலியாற்றினர்.
இப்புதனன்று வழங்கப்பட்டிருந்த வாசகங்களின் அடிப்படையில் (எஸ்ரா 9: 5-9; லூக்கா 9: 1-6) மறையுரை வழங்கியத் திருத்தந்தை, தன் குற்றங்களால் இறைவன் முன் தலைகுனிந்து நின்ற இறைவாக்கினர் எஸ்ராவைப் போல, நாமும் போலியான தெய்வங்களை வணங்கியதால், இறைவனை ஏறெடுத்துக் காணமுடியாமல் நிற்கிறோம் என்று கூறினார்.
இறைவாக்கினர் எஸ்ராவைப்போல நாம் இறைவனை நோக்கி செபங்களை எழுப்பவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குறிப்பாக, சிரியா, லெபனான், மத்தியக்கிழக்குப் பகுதி நாடுகளுக்காகச் செபிப்போம் என்று விண்ணப்பித்தார்.
திருப்பலியில் இறுதியில், கர்தினால் Boutros Rai அவர்கள், திருத்தந்தைக்குச் சிறப்பான முறையில் நன்றி தெரிவித்தார். செப்டம்பர் 7ம் தேதியன்றும், இன்னும் பல தருணங்களிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிரியாவின் மீதும், மத்தியக்கிழக்குப் பகுதி நாடுகள் மீதும் காட்டிவந்துள்ள அக்கறையால், அப்பகுதி மக்கள் மனதில் அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வளர்ந்திருப்பதாக கர்தினால் Boutros Rai அவர்கள், தன் நன்றி உரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.