2013-09-26 15:40:22

கனடா ஆயர் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தில் Honduras கர்தினால் Maradiaga


செப்.26,2013. செப்டம்பர் 24, இச்செவ்வாய் முதல் கனடாவின் ஆயர் பேரவை நடத்தி வரும் ஆண்டுக் கூட்டத்தின் இரண்டாம் நாளான இப்புதனன்று, Honduras நாட்டின் கர்தினால் Oscar Rodriguez Maradiaga அவர்கள், கனடா ஆயர்களைச் சந்தித்துப் பேசினார்.
கத்தோலிக்கத் திருஅவையின் நிர்வாகத் துறைகளை மறுபரிசீலனை செய்து, அவற்றில் தேவையான மாற்றங்களைப் பரிந்துரைக்க எட்டு கர்தினால்கள் கொண்ட குழு ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.
அக்டோபர் மாதத் துவக்கத்தில் தங்கள் ஆலோசனைக் கூட்டங்களைத் துவங்கவிருக்கும் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக கர்தினால் Maradiaga அவர்களை, திருத்தந்தை நியமித்துள்ளார்.
திருஅவையின் மைய நிர்வாகத்திலும், தலத்திருஅவைகளின் நிர்வாகத்திலும் உருவாக வேண்டிய மாற்றங்கள் குறித்து, கனடா நாட்டு ஆயர்களுடன் கர்தினால் Maradiaga அவர்கள் பேசினார் என்று Zenit கத்தோலிக்கச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் எழுதிய 'Pacem in Terris' என்ற சுற்றுமடலின் 50ம் ஆண்டைக் கொண்டாடும் இவ்வேளையில், நீதி, அமைதி, அன்பு ஆகிய உயர்ந்த விழுமியங்களை இவ்வுலகில் வளர்க்க, குறிப்பாக கனடா நாட்டில் வளர்க்க, ஆயர்கள் ஆற்றவேண்டிய பணிகள் என்ற தலைப்பில் கனடா ஆயர்களின் ஆண்டுக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.