2013-09-25 16:41:20

மில்லென்னிய இலக்குகளை அடைய இன்னும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் - ஐ.நா. உயர் அதிகாரி Helen Clark


செப்.25,2013. மில்லென்னிய இலக்குகளை அடைய இன்னும் 830 நாட்களே உள்ள நிலையில் நமது முயற்சிகளைக் கைவிடும் மனநிலையைத் தவிர்த்து, இன்னும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில் உலகம் பல்வேறு வழிகளில் முன்னேறி வந்திருந்தாலும், தேவைகளில் உள்ள வறியோரின் வாழ்வுத்தரம் இன்னும் உயராமல் இருக்கின்றது என்று ஐ.நா. முன்னேற்ற செயல்திட்டங்களின் ஒருங்கிணைப்பாளர் Helen Clark அவர்கள், இச்செவ்வாயன்று சிறப்பான ஒரு வேண்டுகோளை உலக அரசுகளுக்கு விடுத்தார்.
மிக வறியச் சூழலில் வாழ்வோரின் எண்ணிக்கையைக் குறைப்பது, அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது, சேரிகளில் குடியிருப்போரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது என்பன 2000மாம் ஆண்டில் ஒரு கனவாக இருந்தாலும், தற்போது இவை ஓரளவு நனவாக மாறியுள்ளது என்று உலக வங்கியின் தலைவர் Jim Yong Kim அவர்கள் கூறினார்.
இருப்பினும், மில்லென்னிய இலக்குகளை முற்றிலும் அடைவதற்கு அரசு, தனியார் துறை, அரசு சாரா அமைப்புக்கள், பொது மக்கள் என்று அனைவரும் இணைந்து இன்னும் தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் Yong Kim அவர்கள் கூறினார்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.