2013-09-25 16:28:36

அன்னைமரியா திருத்தலங்கள் – கருணை அன்னைமரியா திருத்தலம், பார்செலோனா, இஸ்பெயின்(Our Lady of Mercy, Barcelona, Spain)


செப்.,25,2013. வதைப்போர் முகாமிலிருந்து யாரையாவது விடுதலை செய்யும் ஆபத்தான முயற்சிக்கு உங்கள் வாழ்வை அர்ப்பணிக்கத் தயாரா? ஒரு சிறைக்கைதிக்குப் பதிலாக நீங்கள் தண்டனை அனுபவிக்க முன்வருவீர்களா? ஒரு கொத்தடிமையைக் காப்பாற்றுவதற்கு உங்கள் வாழ்க்கை வசதிகளையும், ஏன் அத்தியாவசியத் தேவைகளையும்கூட விட்டுக்கொடுக்க உங்களால் இயலுமா? அடிமைவாழ்வு நடத்துவோர் அதிலிருந்து விடுதலை செய்யப்படுவதற்குச் செபமும் தவமும் செய்கின்றீர்களா? இதற்கெல்லாம் முன்வருபவர்கள் வரலாற்றில் அன்றும் இன்றும் இருந்து வருகிறார்கள். இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஆற்றிவரும் அரும்பணிகளுக்காக ஐ.நா.வின் உயரிய விருதை ஆப்ரிக்காவின் காங்கோ குடியரசின் அருள்சகோதரி Namaika வருகிற திங்களன்று பெறவுள்ளார். இப்படி, புலம்பெயர்ந்தோர், சிறார் தொழில்முறை, மனித வியாபாரம், பாலியல் வன்செயல்கள் என இந்நவீனகால அடிமைத்தனங்களை ஒழிப்பதற்காக உழைக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் சில அன்னைதெரேசாக்கள் பற்றி நாம் அவ்வப்போது அறிந்து வருகிறோம். ஆப்ரிக்காவிலிருந்து மனிதர்கள் விலங்குகள் போன்று அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்டு, அவர்களின் உடல்கட்டமைப்பு, உடல்வலிமை போன்றவற்றுக்கு ஏற்ப சந்தையில் விலைபோன அக்காலத்தில், இவ்வடிமைகளை மீட்பதற்குத் தங்களது உயிரையே பணயம் வைத்து பல கிறிஸ்தவர்கள் பணி செய்துள்ளனர்.
கி.பி. 711ம் ஆண்டுக்கும் 1492ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூர்ஸ் எனப்படும் முஸ்லீம்கள், தற்போதைய இஸ்பெயின், போர்த்துக்கல், அன்டோரா, பிரான்சின் ஒரு பகுதி, ஜிப்ரால்ட்டர் ஆகியவற்றை உள்ளடக்கிய இபேரியன் தீபகற்பம், சிசிலி, மால்ட்டா, மொரோக்கோ, மேற்கு அல்ஜீரியா, மேற்கு சஹாரா, மௌரித்தானியா ஆகியவற்றைக் கொண்ட பகுதியை ஆக்ரமித்திருந்தனர். மத்திய காலத்தில் 700 ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் கிறிஸ்தவப் பகுதிகளை ஆக்ரமித்திருந்த இந்த முஸ்லீம்கள் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்களை அடிமைகளாக்கி, அவர்கள் தங்களது கிறிஸ்தவ விசுவாசத்தை மறுதலிக்குமாறு பலவகைகளில் துன்புறுத்தி வதைத்தனர். இதில் பல கிறிஸ்தவ அடிமைகள் மறைசாட்சி வாழ்வையும் எதிர்கொண்டனர். எனவே கத்தோலிக்கத் திருஅவை இக்கிறிஸ்தவ அடிமைகளை மீட்பதற்குத் திட்டமிட்டது. இவ்வடிமைகளை மீட்பதற்காக, 1198ம் ஆண்டில் புனித Matha Johnம், புனித Valois Felixம் Trinitarian துறவு சபையை ஆரம்பித்தனர். இச்சபையினர் 1787ம் ஆண்டுவரை ஒன்பது இலட்சம் அடிமைகளை மீட்டனர். புனித பீட்டர் நொலாஸ்கோ தலைமையில் தொடங்கப்பட்ட Mercedarian துறவு சபையினர் 1218ம் ஆண்டுக்கும் 1632ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 4,90,736 அடிமைகளை மீட்டனர். அடிமையாக இருந்த புனித வின்சென்ட் தெ பவுல், 1642ம் ஆண்டுக்கும் 1660ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 12 இலட்சம் பவுண்டு வெள்ளிக்கு 1,200 கிறிஸ்தவ அடிமைகளை மீட்டார்.
அக்காலத்தில் பல கிறிஸ்தவ நாடுகள் ஒன்றிணைந்து Las Navas de Tolosa எனுமிடத்தில் இம்முஸ்லீம்களுடன் சண்டையிட்டு அவர்களைத் தோற்கடித்தனர். எனினும், இஸ்பெயின் நாடு, Berber என்ற முஸ்லீம் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தினால் மிகவும் துன்புற்றது. தங்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுமாறு இஸ்பானியர்கள் இறைவனிடம் உருக்கமாகச் செபித்தனர். அப்போதுதான் அந்த அற்புதம் நடந்தது. 1218ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதியன்று அன்னைமரியா புனித பீட்டர் நொலாஸ்கோவுக்கும், அவரின் ஆன்மீக வழிகாட்டியான புனித Pennafort Raymundவுக்கும், Aragon அரசர் முதலாம் ஜேம்ஸ்க்கும் காட்சி கொடுத்தார். இவர்கள் மூவரும் இணைந்து ஒரு துறவு சபையை ஆரம்பித்து Berberகளிடமிருந்து கிறிஸ்தவ அடிமைகளை மீட்குமாறு அன்னைமரியா அக்காட்சியில் கேட்டுக்கொண்டார். அத்துடன், இத்துறவு சபை, அடிமை வாழ்வில் இருப்பவர் அனைவருக்கும் தமது கருணையைப் பரப்ப வேண்டுமென்றும் அக்காட்சியில் அன்னைமரியா கூறினார். இக்காட்சியினால் ஈர்க்கப்பட்ட புனித பீட்டரும், புனித Raymundம் அன்னைமரியின் கருணையைப் பரப்ப உறுதி எடுத்தனர். அத்துடன், முஸ்லீம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மற்றும் கைதிகளாக்கப்பட்ட கிறிஸ்தவர்களை மீட்பதற்குத் தங்களை அர்ப்பணிக்கவும் உறுதி எடுத்தனர்.
புனித பீட்டர் நொலாஸ்கோவின் வாழ்வு பிணையமீட்பு அன்னைமரியாவுடன் தொடர்புடையது. 1189ம் ஆண்டு பிரான்சின் Mas-des-Saintes-Puellesல் பிறந்த இவர், தனது 25வது வயதில் 1214ம் ஆண்டில் கன்னிமை வார்த்தைப்பாட்டை எடுத்து தனது சொத்தின் பெரும்பகுதியை திருஅவைக்கென எழுதி வைத்தார். அன்னைமரியின் வேண்டுகோளின்படி அடிமைகளையும், பிணையல்கைதிகளையும் மீட்பதற்காகப் புதிய துறவு சபையும் ஆரம்பிக்கப்பட்டது. 1235ம் ஆண்டு சனவரி 17ம் தேதி இஸ்பெயினின் பார்செலோனாவில் இத்துறவு சபை அரசர் ஜேம்ஸால் சட்டப்படி நிறுவப்பட்டது. இச்சபையைப் பின்னாளில் கருணையின் அன்னைமரி என்ற பெயரில் திருத்தந்தை 9ம் கிரகரி அங்கீகரித்தார். ஏழ்மை, கன்னிமை, பணிவு ஆகிய மூன்று வார்த்தைப்பாடுகளை எடுத்து புனித பீட்டர் நொலாஸ்கோ இச்சபையின் முதல் தலைவரானார். அத்துடன் இவரின் தலைமையில் மூர்ஸ் என்ற முஸ்லீம்களிடமிருந்து கிறிஸ்தவ அடிமைகளை மீட்கும் பணி தொடங்கியது. மேலும், அன்னைமரியா தனக்குக் காட்சி கொடுத்தது குறித்து பேசியதை ஆவலுடன் கேட்ட மக்களுக்கு மிகுந்த அன்புடனும், பக்தியுடனும் விவரித்தார் புனித ரெய்மண்ட். கைதாகியிருக்கும் கிறிஸ்தவர்களை மீட்பதற்கான பிணையல் தொகையாக, அன்னைமரியா இப்புனிதருக்கு இரண்டு பைகள் நிறைய காசுகள் கொடுத்துள்ளார். எனவே இவ்வன்னை பிணையல்மீட்பு அன்னைமரியா எனவும் அழைக்கப்படுகிறார்.
மூர்ஸ் முஸ்லீம்கள் பின்வாங்க, பின்வாங்க இச்சபையில் பல இளைஞர்கள் சேர்ந்தனர். இத்துறவு சபையினர் 'Mercedarians' எனவும் அழைக்கப்பட்டனர். பிணையல்மீட்பு அன்னைமரியா எனவும், கருணை அன்னைமரியா எனவும் இவ்வன்னை அழைக்கப்படுகிறார். இங்கிலாந்து காப்பாற்றப்பட்டதற்காக வரதட்சணையின் அன்னைமரியா எனவும் இவ்வன்னை அழைக்கப்படுகிறார். இவ்வன்னையின் விழா செப்டம்பர் 24ம் தேதியன்று ஆண்டுதோறும் சிறப்பிக்கப்படுகின்றது. முதலில் இஸ்பெயினில் பரவிய இப்பக்தி பின்னர் பிரான்சிலும், பின்னர் பல இடங்களிலும் பரவியது. 1687ம் ஆண்டில் இந்தக் கருணை அன்னைமரியிடம் செபித்ததன்பேரில் பார்செலோனாவிலிருந்து வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு ஒழிந்தது. இப்புதுமை பெரிய நன்றி விழாவாக இன்றும் நினைவுகூரப்படுகின்றது. 1730ம் ஆண்டில் பெருவியன் பகுதிகளுக்கும், 1823ம் ஆண்டில் படைகளுக்கும் பாதுகாவலராக பிணையல்மீட்பு அன்னைமரியா அறிவிக்கப்பட்டார். இச்செவ்வாயன்று இவ்வன்னையின் விழா பார்செலோனாவில் வெகு ஆடம்பரமாகச் சிறப்பிக்கப்பட்டது. அந்நகரில் இத்தாய்க்கு அழகான திருத்தலம் உள்ளது.
பிணையல் கைதிகள், கடத்தப்பட்டிருப்பவர்கள், அநியாயக் கைதிகள் போன்ற அனைவர்மீதும் நாம் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டுமென்று இந்தக் கருணை அன்னைமரியா, இந்தப் பிணையல்மீட்பு அன்னைமரியா நமக்குக் கற்றுத்தருகிறார்.








All the contents on this site are copyrighted ©.