2013-09-24 15:32:59

நைரோபி பயங்கரவாதத் தாக்குதலுக்கு கென்யப் பல்சமயத் தலைவர்கள் வன்மையான கண்டனம்


செப்.,24,2013. கென்யத் தலைநகர் நைரோபியில் வெஸ்ட்கேட் வர்த்தக வளாகத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குத் தங்களது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டின் பல்சமயத் தலைவர்கள்.
இப்பயங்கரவாதத் தாக்குதல், அந்நாட்டின் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பிரச்சனையை விதைக்க இடம்பெற்ற முயற்சி என்பதில் சந்தேகமேயில்லை எனக் கூறும் இத்தலைவர்கள், இம்முயற்சி பலனளிக்காது என்றும், தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் உறுதி கூறியுள்ளனர்.
இன்னும், ஆயிரத்துக்கு மேற்பட்ட பிணையக் கைதிகளை துப்பாக்கி மனிதர்களிடமிருந்து மீட்டுள்ளதற்கு அரசுப் படைகளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது NCCK என்ற கென்ய தேசிய கிறிஸ்தவ சபைகள் அமைப்பு.
மேலும், கென்யாவின் பொதுமக்கள் பலரை இஸ்லாமியத் தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள வணிக வளாகத்தில், முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கென்யாவின் பாதுகாப்புப் படைகள் தாக்குதல்களை நடத்திவருகின்றனர் என்று பிபிசி கூறியுள்ளது.
பிரான்ஸ், ஹாலந்து, தென்னாப்ரிக்கா, இந்தியா, கானடா, ஆஸ்திரேலியா பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டவரும், கென்யக் குடிமக்களும் என 69 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 175க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் பலர் இன்னும் கணக்கில் வராமல் இருக்கின்றனர் எனவும் சொல்லப்படுகின்றது.
சொமாலியாவில் தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட கென்யா, தனது துருப்புகளை அனுப்பியதற்குப் பழிவாங்குவதற்காக இந்தத் தாக்குதலைத் தாங்கள் நடத்தியதாக அல் ஷபாப் இஸ்லாமிய தீவிரவாதிகள் கூறுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.