2013-09-24 15:27:36

திருத்தந்தை பிரான்சிஸ் : நமது இன்ப, துன்ப நேரங்களில் ஆண்டவர் உடனிருக்கிறார்


செப்.,24,2013. நமது இன்ப, துன்ப நேரங்கள் என எப்பொழுதும் இயேசு நம்மோடு இருக்கிறார் என்று இச்செவ்வாய் காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
‘நாம் ஆண்டவரது இல்லத்துக்கு அகமகிழ்வோடு போவோம்’ என்ற திருப்பா வரிகளை வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், திருநற்கருணை திருவருள்சாதனம் ‘வித்தைகாட்டும் ஒரு வழிபாட்டுமுறை’ அல்ல, மாறாக, நம் வாழ்வில் நம்மோடு இருக்கும் இயேசுவைச் சந்திப்பதாகும் என்றும் கூறினார்.
இறைமக்களின் வரலாற்றில் மகிழ்வைக் கொண்டுவந்த அழகான தருணங்களும், அதேசமயம், வேதனை, மறைசாட்சிமரணம், பாவம் ஆகியவற்றின் அழகற்ற நேரங்களும் இருந்திருக்கின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.
கடவுள் முடிவில்லாதவராய் இருக்கிறார், எனவே அவருக்கு வரலாறு கிடையாது, இந்தக் கடவுள் தம் மக்களோடு உடன்நடந்து வரலாறு படைக்க விரும்பினார் என்றும் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இதையும்விட மேலாக, கடவுள், இயேசு வழியாக நம்மோடு நடந்து நம்மில் ஒருவராக மாற விரும்பினார் என்றும் தெரிவித்தார்.
இது கடவுளின் மேன்மையைக் காட்டுகின்றது, அதேவேளை இது அவரின் தாழ்மையை வெளிப்படுத்துகின்றது, தம் மக்கள் பாவத்திலும், சிலைவழிபாட்டிலும் அவரிடமிருந்து தூரச் சென்றாலும், அவர் நம் மக்களுக்காகக் காத்திருக்கிறார், இயேசுவும் இதே தாழ்மையை வெளிப்படுத்தினார் என்றும் கூறினார் திருத்தந்தை.
இயேசு இறைமக்களோடு நடக்கிறார், பாவிகளோடு நடக்கிறார், செருக்குள்ளவருடன் நடக்கிறார், பரிசேயர்களின் செருக்குள்ள இதயங்களுக்கு உதவி செய்கிறார் என்றும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், திருஅவை கடவுளின் தாழ்மையில் மகிழ்ச்சியடைகின்றது என்றும் மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.