2013-09-23 16:10:49

பாகிஸ்தான் கிறிஸ்தவ கோவில் மீதான தாக்குதலுக்கு திருத்தந்தை கண்டனம்


செப்.23,2013. பாகிஸ்தான் நாட்டில் தற்கொலை குண்டு தாக்குதல் மூலம் எழுபது கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளது, சரியான பாதையல்ல, இதனால் எவ்வித பலனும் கிட்டப்போவதில்லை என தன் கண்டனத்தை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறன்று இத்தாலியின் கலியாரி நகருக்கு மேய்ப்புப்பணிச் சார்ந்த திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, அதன் இறுதி நிகழ்வாக இளையோரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
அமைதி நிறைந்த உலகைக் கட்டியெழுப்புவதற்கான பாதை அழிவுப்பாதையல்ல என்ற திருத்தந்தை, மேலும் சிறந்த உலகை கட்டியெழுப்ப விரும்புவோர், அமைதியின் பாதையைத் தேர்ந்துகொள்ளட்டும் என எடுத்துரைத்தார்.
பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தோருக்காக அனைவரும் செபிப்போம் என அழைப்பு விடுத்து, இளையோரோடு சேர்ந்து அங்கேயே செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
வட பாகிஸ்தானின் பெஷாவர் அனைத்துப்புனிதர்கள் கிறிஸ்தவக் கோவிலின் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 78 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பெஷாவர் நகரில் நடந்த இத்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அண்மை ஆண்டுகளில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில், மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.
ஞாயிறு வழிபாடு முடிந்து கோவிலில் இருந்து, மக்கள் திரும்பிச் செல்லுகையில் இருவர், தற்கொலை தாக்குதலை நடத்தி, இவ்வுயிரிழப்புகளுக்குக் காரணமாகியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.