2013-09-23 16:11:15

இறை வழிபாட்டில் ஈடுப்பட்டிருந்த கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் வன்மையான கண்டனத்திற்குரியது - இந்திய ஆயர் பேரவை


செப்.23,2013. ஞாயிறு வழிபாட்டில் ஈடுப்பட்டிருந்த கிறிஸ்தவர்களை எக்காரணமும் இன்றி தாக்கிய வன்முறையாளர்களின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று இந்திய ஆயர் பேரவை கூறியுள்ளது.
பாகிஸ்தானில், பெஷாவர் நகரில் அமைந்துள்ள அனைத்துப் புனிதர்கள் ஆலயத்தில், செப்டம்பர் 22, இஞ்ஞாயிறன்று வழிபாட்டிற்கெனக் கூடியிருந்த கிறிஸ்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டத் தாக்குதலைக் குறித்து இந்திய ஆயர் பேரவை தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
பேரவையின் சார்பாக, தலைமைச் செயலர், பேராயர் ஆல்பர்ட் டிசூசா அவர்கள் வெளியிட்டுள்ள இச்செய்தியில், தற்காப்பு ஏதுமின்றி, இறைவழிபாடு என்ற உயர்ந்த முயற்சியை மேற்கொண்டிருந்த மக்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் முற்றிலும் கண்டனத்திற்குரியதென்று கூறப்பட்டுள்ளது.
எப்பாவமும் அறியாத மக்களை இலக்காக்குவது இஸ்லாமியப் படிப்பினைக்கு முரணானது என்றும், தீவிரவாதிகளின் கொடூரமான மிருகத் தன்மையை இத்தாக்குதல் வெளிப்படுத்துகிறது என்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவர்கள் வெளியிட்டுள்ள கருத்தை, இந்திய ஆயர் பேரவை முற்றிலும் ஆதரிக்கிறது என்றும் இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பொய்யான, திரிக்கப்பட்ட காரணங்களைக் காட்டி, உலகின் பல பகுதிகளில் அப்பாவி கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்காக வன்முறைகளுக்கு இலக்காகி வருவதையும் இந்திய ஆயர் பேரவையின் அறிக்கை வன்மையாகக் கண்டித்துள்ளது.

ஆதாரம் : CBCI








All the contents on this site are copyrighted ©.