2013-09-21 17:12:39

திருத்தந்தை: இயேசுவின் பார்வை உங்கள் மீதுபட அனுமதியுங்கள்


செப்.21,2013. இயேசுவின் பார்வை நம்மீது திரும்புவதற்கு நம்மை அனுமதிப்பதன் மூலம், நம் வாழ்வை நாம் மாற்றமுடியும் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித மத்தேயு விழாவான இச்சனிக்கிழமையன்று வத்திக்கானிலுள்ள புனித மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கியத் திருத்தந்தை, வரி வசூலிப்பவராக இருந்த புனித மத்தேயுவை இயேசு உற்றுநோக்கத் துவங்கியதுமே அவரின் வாழ்வில் மாற்றம் நிகழத் துவங்கியது என்றார்.
இயேசுவின் பார்வை பட்டதும் தன் மனதில் மாற்றத்தை உணர்ந்த புனித மத்தேயு, உடனே எழுந்து இயேசுவின் பின்னேச் சென்றார் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
இயேசுவின் பார்வை நம்மைச் சோர்வடைய விடாமல் தூக்கி நிறுத்துகிறது, மற்றும் நமக்கு ஊக்கமளித்து நம்மை வளரச்செய்கின்றது எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரை பின்பற்றுவதற்கான பலத்தையும் அப்பார்வை நமக்கு வழங்குகிறது என மேலும் உரைத்தார்.
இயேசுவின் பார்வை பட்டு வாழ்வில் மாற்றத்தைக் கண்டவர்களின் வரிசையில் தூய பேதுரு குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை, இயேசுவை மறுதலித்தபின், அவர் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தேம்பி அழுததையும், இயேசு உயிர்த்தபின் 'நீ என்னை அன்புச்செய்கிறாயா' எனக் கேட்டதும் நிகழ்ந்த மாற்றம் போன்றவைகளையும் சுட்டிக்காட்டினார்.
தன் தாயை உற்றுநோக்கி அவரை நம் தாயாக தந்தது, நல்ல கள்வரை உற்று நோக்கி உரையாடியது ஆகியவைகளையும் எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவல்ல அந்தப் பார்வையை வழங்க நமக்காகவும் இயேசு காத்திருக்கிறார் என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.