2013-09-20 16:04:39

ஹங்கேரி மற்றும் ஹொண்டுராஸ் ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சந்திப்பு


செப்.20,2013. செப்டம்பர் 20, இவ்வெள்ளி காலை, ஹங்கேரி மற்றும் ஹொண்டுராஸ் ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து உரையாடினார்.
தன் மூன்று பெண்குழந்தைகள், ஒரு மகன் மற்றும் மனைவியுடன் திருத்தந்தையைச் சந்தித்த ஹங்கேரி நாட்டு அரசுத்தலைவர் János Áder அவர்கள், திருத்தந்தையின் பதவியேற்புத் திருப்பலியில் கலந்துகொண்டு, அவரைச் சந்தித்தபின், தற்போது இரண்டாவது முறையாக திருத்தந்தையைச் சந்திப்பது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டார்.
இச்சந்திப்பின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசுத் தலைவருக்கு பாப்பிறை பதக்கம் ஒன்றை வழங்க, அரசுத்தலைவரும் தங்கள் நாட்டின் சார்பாக, மரத்தாலான திருப்பலி கிண்ணம் ஒன்றையும், ஹங்கேரி மரியன்னை திருத்தலத்தின் புனித நீர் கொண்ட ஒரு குப்பியையும், 1532ம் ஆண்டு அச்சிடப்பட்ட புனித பவுல் அடியார் திருமுகத்தின் ஒரு பிரதியையும் திருத்தந்தைக்கு வழங்கினார்.
அரசுத்தலைவர் Áder அவர்களின் மகள்களுள் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த சிலுவையை திருத்தந்தை ஆசீர்வதித்தது உணர்வுப் பூர்வமாக இருந்ததென செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இவ்வெள்ளிக் காலை, தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் ஹொண்டுராஸ் அரசுத்தலைவர் Porfirio Lobo Sosa அவர்களும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தார்.
திருத்தந்தை அவர்கள் பாப்பிறை பதக்கம் ஒன்றை அரசுத்தலைவர் Sosa அவர்களுக்கு வழங்க, அரசுத் தலைவரால் இவ்வெள்ளிக் காலையில் வத்திக்கான் தோட்டத்திற்கு வழங்கப்பட்ட ஹொண்டுராஸ் நாட்டு பாதுகாவலியான Suyapa அன்னைமரியாவின் 200 கிலோ எடைகொண்ட வெண்கலச் சிலைக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் நன்றியை வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.