2013-09-20 16:04:49

பணம், ஒரு கடவுள் ஆகும் வலிமை கொண்டதால், அது, முதல் கட்டளைக்கு எதிரான பாவம் - திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.20,2013. கடவுளுக்கும் செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது என்று விடுக்கப்படும் அறைகூவல், கம்யுனிச அறைகூவல் அல்ல, அது நற்செய்தியிலிருந்து வரும் அறைகூவல் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வெள்ளியன்று காலை புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலியாற்றிய திருத்தந்தை, புனித பவுல் அடியார், திமோத்தேயுவுக்கு எழுதிய அறிவுரைகளை தன் மறையுரையின் மையமாக்கினார்.
சமுதாயத்தில் நல்லதொரு இடத்தைத் தருகிறது என்ற கண்ணோட்டத்துடன் திருப்பலியில் கலந்துகொள்ளும் ஒருவர், திருப்பலியையும் ஒரு வர்த்தகக் கண்ணோட்டத்துடன் நோக்குகிறார் என்று சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
செல்வத்தின்மீது பற்றுகொண்டு வாழ்வதை, திருஅவையில் முதல் சில நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் வெகுவாகக் கண்டனம் செய்துள்ளனர் என்று கூறியத் திருத்தந்தை, 'அலகை வெளியேற்றும் கழிவுப்பொருளே பணம்’ என்பன போன்ற கடுமையான எச்சரிக்கைகள் முற்காலத்தில் விடுக்கப்பட்டன என்பதைச் சுட்டிக்காட்டினார்.
பணத்திற்கு எதிராக பத்துக்கட்டளைகளில் எதுவும் கூறப்படவில்லை என்ற கேள்வி எழுப்புவோருக்கு, பணம், ஒரு கடவுள் ஆகும் வலிமை கொண்டதால், அது, முதல் கட்டளைக்கு எதிரான பாவம் என்பதையும் திருத்தந்தை விளக்கிக் கூறினார்.
மேலும், “கிறிஸ்து எப்போதும் பிரமாணிக்கம் உள்ளவர், எனவே அவரைப் போல பிரமாணிக்கம் கொண்டிருக்க நாம் செபிப்போம்” என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று ஒன்பது மொழிகளில் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.