2013-09-20 16:13:21

குழந்தைகளைச் சரிவர பராமரிக்கத் தவறும் நாடுகள் எதிர்காலத்தை இழந்துவிடுகின்றன - முத்திபேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால்


செப்.20,2013. தன் குழந்தைகளைச் சரிவர பராமரிக்கத் தவறும் நாடுகள் எதிர்காலத்தை இழந்துவிடுகின்றன என்று முத்திபேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் கூறியதை, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா. கூட்டம் ஒன்றில் மீண்டும் நினைவுறுத்தினார்.
ஜெனீவாவில் இயங்கும் ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், மனித உரிமை குறித்து அங்கு நிகழ்ந்த 24வது அமர்வில், இராணுவத்தில் கட்டாயமாக ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் குறித்து கவலை வெளியிட்டார்.
திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் 1979ம் ஆண்டு, அக்டோபர் 2ம் தேதி ஐ.நா. பொது அவையில் பேசுகையில், குழந்தைகளின் வளமானதொரு எதிர்காலம் பற்றி குறிப்பிட்ட கருத்துக்களை பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் மீண்டும் நினைவுறுத்தினார்.
வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு பாதுகாப்பும் உணவும் தருவதாகக் கூறி அவர்களை இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அவர்களின் குழந்தைப் பருவத்தை பல வழிகளில் சிதைத்துவரும் பன்னாட்டு குழுக்களை ஐ.நா. கண்காணிக்க வேண்டும் என்று பேராயர் வேண்டுகோள் விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.