2013-09-20 16:10:00

இயேசு சபையினரின் La Civiltà Cattolica இதழுக்கு, திருத்தந்தை வழங்கியுள்ள தனிப்பட்ட நேர்காணல்


செப்.20,2013. நன்னெறி விழுமியங்கள், மதக் கோட்பாடுகள் என்ற எல்லைகளைத் தாண்டி, மீட்பளிக்கும் இறைவனின் அன்பு இவ்வுலகிற்கு முதலில் அறிவிக்கப்பட வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
பல்வேறு தலைப்புக்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு நீண்ட நேர்காணலில் வழங்கிய கருத்துக்கள், இயேசு சபையினர் பல்வேறு நாடுகளில் நடத்தும் 16 இதழ்களில் செப்டம்பர் 19, இவ்வியாழனன்று வெளியாகியுள்ளன.
உரோம் நகரில் இயேசு சபையினரால் நடத்தப்படும் La Civiltà Cattolica என்ற இதழின் தலைமை ஆசிரியர் அருள் பணியாளர் Antonio Spadaro அவர்கள், ஆகஸ்ட் மாதம் 19,23,29 ஆகிய தேதிகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து மேற்கொண்ட நீண்ட உரையாடல்களில், திருத்தந்தை அவர்கள் பல்வேறு தலைப்புக்களில் பேசிய கருத்துக்கள் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.
ஒரு போர்க்களத்தில் பணியாற்றும் மருத்துவமனை போல திருஅவை விளங்கவேண்டும் என்று கூறியுள்ள திருத்தந்தை, காயப்பட்டு, கசப்புற்று திருஅவையை விட்டு விலகி வாழும் மக்களை திருஅவை தேடிச் செல்லவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தன் தனிப்பட்ட வாழ்வைக் குறித்து பேசியுள்ள திருத்தந்தை, பாவியான தன்னை இறைவன் கருணைகொண்டு பார்த்ததால் அவரைத் தொடர்ந்ததாகவும், தான் இயேசு சபையில் சேர்ந்ததற்கான காரணத்தையும் விளக்கிக் கூறியுள்ளார்.
இந்த நேர்காணலில் திருத்தந்தை அவர்கள் தன் தினசரி வாழ்வில் பின்பற்றும் செப முயற்சிகளைக் குறித்தும், இசை, ஓவியம், இவற்றில் தனக்குப் பிடித்த கலைஞர்கள் குறித்தும், வாசித்துப் பயனடைந்த நூல்கள் குறித்தும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.