2013-09-20 16:10:42

அமெரிக்காவில் வாழும் கத்தோலிக்கர்களில் 80 விழுக்காட்டினர் திருத்தந்தை பிரான்சிஸ் மீது பெரும் ஈடுபாடு கொண்டுள்ளனர் – ஆய்வுத் தகவல்


செப்.20,2013. வறியோர் மட்டில் காட்டும் பரிவும், சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்வோரை தேடிச்செல்லும் போக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் ஆறுமாத பணியின் முக்கிய அம்சங்கள் என்று அமெரிக்காவில் உள்ள பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.
செப்டம்பர் 12ம் தேதி தன் ஆறு மாத பணிக்காலத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவு செய்ததையடுத்து, Pew Research Centre என்றழைக்கப்படும் ஓர் ஆய்வு மையம் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பின் முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளன.
இந்த மையம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தாக்கம் திருஅவையைத் தாண்டி உலக சமுதாயத்தில் பரவலாக, அதேவேளையில் ஆழமாகப் பதிந்துள்ளது என்பது தெளிவாகிறது.
இக்கருத்துக் கணிப்பின்படி, அமெரிக்காவில் வாழும் கத்தோலிக்கர்களில் 80 விழுக்காட்டினர் திருத்தந்தை பிரான்சிஸ் மீது பெரும் ஈடுபாடு கொண்டுள்ளனர் என்றும், கத்தோலிக்கர் அல்லாத மற்றவர்கள் மத்தியில் 58 விழுக்காட்டினர் அவர் மீது மிகுந்த மதிப்பு கொண்டுள்ளனர் என்றும் தெரிகிறது.
திருத்தந்தை இதுவரை மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்கு பெரும் வரவேற்பு காணப்படுகிறது என்றும், செப்டம்பர் 7ம் தேதி சிரியாவின் அமைதிக்காக அவர் மேற்கொண்ட செபங்கள் மிகப் பெருமளவில் வரவேற்பு பெற்றுள்ளது என்றும் இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.