2013-09-20 16:12:45

அடுத்த வாரம் உரோம் நகரில் கூடவிருக்கும் மறைகல்வி ஆசிரியர்களின் மாநாடு


செப்.20,2013. கத்தோலிக்கத் திருஅவையின் மறைகல்வி பாடங்கள், விவிலிய வார்த்தைகள் அனைத்தும், Facebook, Twitter போன்ற சமுதாய வலைத்தளங்கள் வழியாகவும், புதியத் தொடர்பு சாதனங்கள் வழியாகவும் மக்களை இன்னும் அதிகமாக சென்றடைவதற்கு திருஅவை முயற்சிகள் மேற்கொண்டுள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
செப்டம்பர் 25, வருகிற புதன்கிழமை முதல் செப்டம்பர் 29, ஞாயிறு முடிய உரோம் நகரில் கூடவிருக்கும் மறைகல்வி ஆசிரியர்களின் மாநாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதியவழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Rino Fisichella அவர்கள் இவ்வாறு கூறினார்.
50 நாடுகளைச் சேர்ந்த 1600க்கும் அதிகமான மறைகல்வி ஆசிரியர்கள் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டின் உச்சகட்டமாக, செப்டம்பர் 28, 29 ஆகிய நாட்கள் திருஅவையின் அடித்தளமான புனித பேதுருவின் கல்லறையைத் தரிசிப்பதும், திருத்தந்தையுடன் நிகழும் சந்திப்புக்களும் அமையும் என்று பேராயர் Fisichella எடுத்துரைத்தார்.
மாநாட்டின் இறுதி நிகழ்வாக, செப்டம்பர் 29, ஞாயிறன்று காலை 10.30 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருப்பலியும், அதைத் தொடர்ந்து அவர் வழங்கும் மூவேளை செப உரையும் அடங்கும் என்று பேராயர் Fisichella செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.