2013-09-20 16:13:58

அகில உலக அமைதி நாளையொட்டி, ஐ.நா. பொதுச் செயலர் வெளியிட்ட செய்தி


செப்.20,2013. சகிப்புத்தன்மை மற்றும் வாழ்வின் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ளும் பக்குவம் ஆகிய விழுமியங்களின் அடிப்படையில் இவ்வுலகின் குடிமக்களை உருவாக்கும் ஒரு கல்வித்திட்டத்தைப் பெறுவது ஒவ்வொரு குழந்தையின் உரிமை என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
செப்டம்பர் 21, இச்சனிக்கிழமையன்று கொண்டாடப்படும் அகில உலக அமைதி நாளையொட்டி, செய்தி வெளியிட்ட பான் கி மூன் அவர்கள், இவ்வுலக நாள் கொண்டாட்டங்களுக்கு, இவ்வாண்டு 'அமைதிக்கான கல்வி' என்று ஐ.நா. தேர்ந்தெடுத்துள்ள கருத்தை தன் செய்தியில் வலியுறுத்தினார்.
உலக அமைதிக்கு அழைப்பு விடுக்கும் வண்ணம், மரத்தால் ஆன மணி ஒன்று ஜப்பான் நாட்டின் பரிசாக, ஐ.நா. தலைமை அலுவலகத்தின் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.
1981ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் உலக அமைதி வேண்டி ஒலிக்கப்பட்டு வரும் இந்த மணியை, பான் கி மூன் அவர்கள் உலக அமைதிக்கென இவ்வாண்டு அடித்தார்.
இன்றைய உலகில் 5 கோடியே 70 இலட்சம் குழந்தைகள் அடிப்படை கல்வி வசதிகள் மறுக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்ட பான் கி மூன் அவர்கள், அனைவருக்கும் கல்வி வேண்டும் என்று போராடி வரும் Malala Yousafzai என்ற இளம் பெண்ணின் முயற்சிகளைப் பாராட்டினார்.
இச்சனிக்கிழமை கொண்டாடப்படும் உலக அமைதி நாளையொட்டி, உலகின் பல நாடுகளிலிருந்து 500க்கும் அதிகமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் வீடியோ தொடர்பு கொண்டு நடத்தும் ஒரு கருத்தரங்கில் அமைதி குறித்த தங்கள் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கின்றனர் என்று ஐ.நா. செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.