2013-09-19 16:21:40

செப்.,20,2013 கற்றனைத்தூறும் ...உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம்


ஏறக்குறைய 17,508 தீவுகளைக் கொண்ட இந்தோனேசிய நாடு உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டங்களைக் கொண்டுள்ள நாடாகத் திகழ்கிறது. இந்நாட்டில் கிழக்கு ஜாவாத் தீவிலுள்ள Bromo எரிமலை, Lombok தீவிலுள்ள Rinjani எரிமலை, உலகின் மிக அழகிய இந்துக் கோவிலான Prambanan, போரோபுதூர்(Borobudur or Barabudur) மகாயான புத்தமதக் கோவில் உட்பட புகழ்பெற்ற பல இடங்கள் உள்ளன. மத்திய ஜாவாத் தீவில் அமைந்துள்ள போரோபுதூர் புத்தமதக் கோவில், ஒன்பதாம் நூற்றாண்டில் சைலேந்திரர் அரசப் பரம்பரையால் கட்டப்பட்டது. இது ஆறு சதுர வடிவிலான மேடை அமைப்புக்களையும், அதன்மேல் அமைந்த மூன்று வட்ட வடிவ மேடைகளையும் கொண்டது. இவை, 2,672 சிற்பங்களைக் கொண்ட கற்சுவர்களாலும், 504 புத்தர் சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உச்சியில் அமைந்துள்ள மேடையின் நடுவில், குவிமாடமும் அதனைச் சுற்றி துளைகள் கொண்ட தாதுக் கோபுரங்களுக்குள் அமைக்கப்பட்டுள்ள, இருந்த நிலையிலான 72 புத்தர் சிலைகளும் காணப்படுகின்றன. புத்த மதத்தைச் சார்ந்தவர்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் இந்தக் கோவில் 55 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 1,96,800 கற்களைப் பயன்படுத்தி இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் பத்து அடுக்குகளைக் கொண்டது. இந்த அடுக்குகள் பிரமிடு வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோவிலின் சுவர்களில் புத்தரின் வாழ்க்கை வரலாற்று ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தொலைவிலிருந்து பார்த்தால் சிறிய குன்று போலவும், உயரத்திலிருந்து பார்த்தால் தாமரை போலவும் காட்சியளிப்பது இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.
பிரமாண்டமான இக்கோவில் பராமரிக்கப்படாததால் 11ம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல மண்ணுக்குள் புதைந்து போனது. 14ம் நூற்றாண்டில், ஜாவாவின் புத்த, இந்து அரசுகள் வீழ்ச்சியுற்று, இஸ்லாம் தலையெடுத்ததோடு போரோபுதூர் கைவிடப்பட்டதாகச் சான்றுகள் கூறுகின்றன. 100 வருடங்களுக்குமுன்பு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இக்கோவிலைத் தோண்டியெடுத்து புதுப்பித்தனர். 1814ம் ஆண்டில் ஜாவாவின் பிரித்தானிய ஆட்சியாளராக இருந்த தாமஸ் ராஃபில்ஸ் (Thomas Raffles) என்பவரால் இது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு வெளியுலகுக்குத் தெரியவந்தது. இதன் பின்னர் இக்கோவில் பல தடவைகள் புதுப்பிக்கப்பட்டது. போரோபுதூர் கோவில் உலகப் பாரம்பரிய வளங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : விக்கிப்பீடியா








All the contents on this site are copyrighted ©.