2013-09-19 16:50:17

இஸ்லாமிய மதகுரு Ahmed al-Tayyeb அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள பாராட்டு


கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே புரிந்துகொள்ளுதலை ஊக்குவிக்கவும், உலகில் அமைதியையும், நீதியையும் கட்டியெழுப்பவும் எகிப்தின் கெய்ரோ நகரில் அமைந்துள்ள Al-Azhar இஸ்லாமியப் பல்கலைக்கழகம் ஆற்றி வரும் பணிகளுக்கு, தன் பாராட்டை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கெய்ரோவின் Al-Azhar இஸ்லாமியப் பல்கலைக்கழகத் தலைவரும், இஸ்லாமிய மதகுருவுமான Ahmed al-Tayyeb அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், இஸ்லாம் மீதும், முஸ்லீம்கள் மீதும் தான் கொண்டுள்ள மதிப்பை வெளியிட்டுள்ளார்.
எகிப்திற்கான திருப்பீடத் தூதர் பேராயர் Jean-Paul Gobel அவர்கள் வழியாக வழங்கப்பட்டுள்ள திருத்தந்தையின் இச்செய்தி, இஸ்லாமியர்கள் மீது கத்தோலிக்கத் திருஅவையும், திருப்பீடமும், திருத்தந்தையரும் கொண்டிருக்கும் ஆழமான அன்பையும், மதிப்பையும் வெளிப்படுத்துவதாக உள்ளது என்று அலெக்சாந்திரியாவின் காப்டிக் கத்தோலிக்க வழிபாட்டு முறை தலைமையகம் கருத்து தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க மதத்திற்கும், இஸ்லாமுக்கும் இடையே நிலவும் தவறான எண்ணங்களைக் களைந்து, இரு தரப்பினரிடையிலும் பேச்சு வார்த்தைகளை மீண்டும் துவக்க, திருத்தந்தையின் இக்கடிதம் தூண்டுதலாக இருக்கும் என்று வல்லுனர்கள் நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.