2013-09-18 16:27:39

பணிபுரியாளரை ஒரு விற்பனைப்பொருளாக நோக்காமல், மனிதர்களாக மதிக்கவேண்டும் - கர்தினால் பீட்டர் டர்க்சன்


செப்.18,2013. வர்த்தக உலகின் முதலாளிகள், தங்களிடம் பணிபுரிவோரை ஒரு விற்பனைப்பொருளாக நோக்காமல், நன்னெறி, சமுதாய விழுமியங்களின் அடிப்படையில், அவர்களை மனிதர்களாக மதிக்கவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
"வர்த்தகத் தலைவர்களின் பணி அழைப்பு" என்ற பெயரில் வத்திக்கான் நூல் வெளியீட்டுத் துறை போர்த்துகீசிய மொழியில் உருவாக்கியிருந்த நூல் ஒன்று, போர்த்துகல் நாட்டின் லிஸ்பன் நகரில் இச்செவாயன்று மாலை வெளியிடப்பட்டது.
இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு, நீதி அமைதி திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், தான் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியில், வர்த்தக உலகம் பின்பற்றக்கூடிய ஒழுக்க நெறிகளை சுட்டிக்காட்டுகையில் இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற திருப்பலியில், அரசியல், சமுதாயம், வர்த்தகம் என்ற அனைத்துத் துறைகளிலும் தலைமைப் பொறுப்பில் இருப்போருக்கு அவர் விடுத்த அழைப்பை தன் செய்தியில் நினைவுகூர்ந்த கர்தினால் டர்க்சன் அவர்கள், தன் செய்தியின் இறுதியில், போர்த்துகல் நாட்டு பாத்திமா அன்னையின் பரிந்துரை அனைவருக்கும் கிடைப்பதாக என்ற வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.
போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்டுள்ள இந்நூல், தற்போது இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மானியம், அரேபியம் உட்பட எட்டு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. சீன, கொரிய, இரஷ்ய மற்றும் தாய்லாந்து மொழிகளில் இந்நூல் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.