2013-09-18 16:28:05

திருத்தந்தையின் வருகை தங்கள் நாட்டுக்கு ஆறுதலைக் கொணரும் - காங்கோ குடியரசு அரசுத் தலைவரின் மனைவி திருத்தந்தைக்கு கடிதம்


செப்.18,2013. காங்கோ குடியரசில் நிலையான அமைதி நிலவ திருத்தந்தை குறிப்பாகச் செபிக்கவேண்டும் என்றும், காயப்பட்டிருக்கும் தங்கள் நாட்டுக்கு திருத்தந்தையின் வருகை ஆறுதலைக் கொணரும் என்றும் காங்கோ குடியரசு அரசுத் தலைவரின் மனைவி திருத்தந்தைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கத்தோலிக்கர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள காங்கோ குடியரசின் அரசுத் தலைவர் Joseph Kabila அவர்களின் மனைவி, Marie Olive Lembe Kabilakabange அவர்கள் அண்மையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தங்கள் நாட்டில் வாழும் கத்தோலிக்கர்கள் அமைதியையும், நல்லுறவையுமே விரும்புகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக தங்கள் நாடு சந்தித்துவரும் தொடர்ந்த வன்முறைகளால் மக்கள் தங்கள் உயிரையும், உடைமைகளையும் இழந்ததோடு, தங்கள் மன வலிமையையும் இழந்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள அரசுத் தலைவரின் மனைவி Kabilakabange அவர்கள், திருத்தந்தையின் செபங்களும், அவரது வருகையும் தங்கள் நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்கும் என்று தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.