2013-09-18 16:27:47

திருத்தந்தையின் செபங்களும், இறந்தோரின் உயிர் தியாகங்களும் சிரியாவில் நல்லதொரு திருப்பத்தைக் கொணர்ந்துள்ளன


செப்.18,2013. கடந்த ஈராண்டுகளுக்கும் மேலாக, சிரியா நாட்டில் தொடர்ந்துவரும் துயர நிலைக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செபங்களும், தாக்குதல்களில் இறந்தோரின் உயிர் தியாகங்களும் ஒரு நல்ல திருப்பத்தைக் கொணர்ந்துள்ளன என்று தமஸ்கு நகரில் பணியாற்றும் திருப்பீடத் தூதர் பேராயர் மாரியோ செனாரி கூறினார்.
சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட வேதியத் தாக்குதல்கள் அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்டனவா அல்லது போராட்டக் குழுக்களின் தரப்பில் மேற்கொள்ளப்பட்டனவா என்பதில் தெளிவில்லை என்று ஐ.நா. விடுத்துள்ள அறிக்கையினைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது இராணுவ படையெடுப்பு நிறுத்தப்பட்டிருப்பதைக் குறித்து தன் நிம்மதியை வெளியிட்ட பேராயர் செனாரி இவ்வாறு கூறினார்.
ஆகஸ்ட் 21ம் தேதி தமஸ்கு நகருக்கு அருகே Ghouta எனுமிடத்தில் மேற்கொள்ளப்பட்டத் தாக்குதல்களில், வேதியப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டன என்ற உண்மை, மனிதகுலம் எவ்வளவு தாழ்ந்த ஒரு நிலைக்கு வந்துள்ளது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்று பேராயர் செனாரி ஆழ்ந்த வருத்தத்துடன் கூறினார்.
இராணுவத் தலையீடு நிறுத்தப்பட்டுள்ளது என்ற முடிவும், வேதியத் தளவாடங்களைக் கண்டறிந்து அவற்றை முற்றிலும் அழிப்பது என்ற முடிவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் மாதம் 7ம் தேதி மேற்கொண்ட செப முயற்சியின் ஒரு விளைவே என்று தமஸ்கு நகரின் திருப்பீடத் தூதர் பேராயர் செனாரி கூறியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.