2013-09-18 16:27:56

காங்கோ குடியரசைச் சேர்ந்த அருள் சகோதரி Angélique Namaika அவர்களுக்கு ஐ.நா. விருது


செப்.18,2013. போரினால் சிதைக்கப்படும் குடும்பங்களில் ஒரு தனி மனிதரின் முயற்சியால் எவ்விதம் மீண்டும் நல்ல மாற்றங்களைக் கொணரமுடியும் என்பதற்கு அருள் சகோதரி Angélique Namaika நல்லதொரு எடுத்துக்காட்டு என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
UNHCR என்றழைக்கப்படும் ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் சார்பில் வழங்கப்படும் Nansen புலம்பெயர்ந்தோர் விருது, காங்கோ குடியரசைச் சேர்ந்த அருள் சகோதரி Namaika அவகளுக்கு வழங்கப்படும் என்று இச்செவ்வாயன்று அறிவித்த ஐ.நா. உயர் அதிகாரி António Guterres அவர்கள் இவ்வாறு கூறினார்.
புனித அகஸ்டின் துறவுச் சபையைச் சேர்ந்த அருள் சகோதரி Namaika அவர்கள், காங்கோ குடியரசின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உழைத்து வருபவர். குறிப்பாக, LRA என்றழைக்கப்படும் வன்முறைக் கும்பலால் பாதிக்கப்பட்ட இளையோருக்கு அருள் சகோதரி Namaika அவர்கள் ஆற்றிவரும் பணிகளுக்காக இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
2009ம் ஆண்டு உருவான இனக் கலவரங்களால் தான் வாழ்ந்த பகுதியை விட்டு துரத்தப்பட்ட அருள் சகோதரி Namaika அவர்கள், தான் நடத்தும் ஒரு மையத்தின் வழியாக இதுவரை 2000க்கும் அதிகமான இளம் பெண்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளார் என்று ஐ.நா.வின் அறிக்கையொன்று கூறுகிறது.
இவ்விருது அறிவிக்கப்பட்ட இதே நாளில், LRA வன்முறை கும்பலால் 2008ம் ஆண்டிலிருந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,20,000 என்ற விவரத்தையும் UNHCR நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அருள் சகோதரி Angélique Namaika அவர்கள் இவ்விருதினை செப்டம்பர் மாதம் 30ம் தேதி ஜெனீவாவில் பெறுவார் என்றும், இதைத் தொடர்ந்து, அவர் அக்டோபர் மாதம் 2ம் தேதி திருத்தந்தையைச் சந்திப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides / ICN








All the contents on this site are copyrighted ©.