2013-09-18 16:28:40

ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் மனித உரிமை விருதிற்கு மலாலா பரிந்துரை


செப்.18,2013. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஆண்டுதோறும் மனித உரிமைக்காகப் பாடுபடுவோர்களில் சிறந்தவரைத் தெரிவு செய்து விருது வழங்குவது வழக்கம்.
Sakharov விருது என்ற பெயரில் வழங்கப்படும் இவ்விருது, ஐரோப்பிய நாடுகளின் உயரிய விருதாக கருதப்படுகிறது. இவ்விருதினைப் பெற்றவர்களில் பர்மாவைச் சேர்ந்த ஆங் சங் ஸூ கி, தென் ஆப்ரிக்காவின் நெல்சன் மண்டேலா போன்றவர்கள் அடங்குவர்.
இவ்வாண்டிற்கான மனித உரிமை விருதினைப் பெறத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் சமீபத்தில் Brussels நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 7 பேர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக இத்திங்களன்று ஐரோப்பிய பாராளுமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த Malala Yousafzaiயும், அமெரிக்காவின் Edward Snowdenனும் அடங்குவர்.
16 வயதான மலாலா பள்ளிக்குச் செல்லும்போது தலிபான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிர்பிழைத்தவர். பெண்கள் கல்விக்காக குரல் கொடுக்கும் இவர் மூன்று உள்ளூர் தேர்தல் குழுவினரால் இந்த விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் Edward Snowden அமெரிக்க அரசு மற்ற நாடுகளை வேவு பார்ப்பதை ஆதாரத்துடன் உலகிற்குத் தெரிவித்தார்.
பசுமைச் சூழல் அமைப்பு ஒன்றினால் இவர் இந்த விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர்கள் ஏழு பேரில் இறுதியாகத் தேர்வு செய்யப்படுவோருக்கு 50 ஆயிரம் யூரோக்கள் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : AP








All the contents on this site are copyrighted ©.