2013-09-18 16:12:53

அன்னைமரியா திருத்தலங்கள் – சிரக்குசா கண்ணீர் வடிக்கும் அன்னைமரியா திருத்தலம், சிசிலி, இத்தாலி


செப்.18,2013. தென் இத்தாலியிலுள்ள சிசிலித் தீவின் தென்கிழக்கே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க நகரம் சிரக்குசா. 2,700 ஆண்டுகள் பழமையுடைய இந்நகர் பழங்கால கிரேக்க வரலாறுக்கும், நாடக அரங்குகளுக்கும், கட்டட கலைக்கும் பெயர்போனது. தொன்மைகால கணித நிபுணரும் பொறியியலாளருமான Archimedes பிறந்த நகரமும் இதுதான். சிரக்குசா நகரம், பழங்கால கிரேக்க கொரிந்து மற்றும் Tenea நகரங்களின் மக்களால் உருவாக்கப்பட்டது. இந்நகரில் அன்னைமரியா காட்சி கொடுக்கவில்லை, ஆனால் தனது கண்ணீரை அந்நகர் மக்களுக்கு அனுப்பினார். 1953ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி அந்தோணினாவும், ஆஞ்சலோ யனுசோவும் திருமணம் செய்துகொண்டனர். அதன்பின்னர் இவர்கள் இருவரும் சிறிது காலத்துக்கு சிரக்குசாவிலுள்ள ஆஞ்சலோ யனுசோவின் தாய் மற்றும் அவரது சகோதரருடன் வாழச் சென்றனர். இவர்கள் மிகவும் ஏழைகள். இவர்களுக்குத் திருமணப் பரிசாக அன்னைமரியின் மாசற்ற திருஇதய திருவுருவப் படம் ஒன்று கொடுக்கப்பட்டது. டஸ்கனி மாநிலத்தில் பலகையில் சாந்தால் செய்யப்பட்ட படம் இது. இந்தப் படத்தை இத்தம்பதியர் தங்களது கட்டிலுக்கு மேலே மாட்டி வைத்தனர்.
அந்தோணினா கர்ப்பம் தரித்தார். அதோடு அடிக்கடி வலிப்பு நோயால் துன்புற்றார். இந்நோய் கண்பார்வையையும் சிறிது நேரத்துக்கு இழக்கச் செய்துவிடும். இந்நோய் கர்ப்பத்தோடு தொடர்புடையது. எனவே இவர் படுக்கையிலே இருக்க வேண்டுமென மருத்துவர் சொன்னார். அந்தோணினாவுக்குச் செபம் ஒன்றே ஆறுதல் அளித்தது. அவரது கணவர் ஆஞ்சலோ இதைக் கிண்டல் செய்தார். 1953ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இந்த வலிப்பு நோய்க் கடுமையானது. வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேரம் நீடித்தது. அப்போது அந்தோணினாவோடு இருந்தவர்கள் மருத்துவரையும், அவரது கணவரையும் அழைத்து வர விரும்பினர். திடீரென அந்தோணினா அமைதியானார். கண்பார்வையிழந்து துன்புற்றார். ஆனால் அன்று 8.30 மணியளவில் அவருக்கு மீண்டும் பார்வை திரும்பியது. இந்த அனுபவத்தை அந்தோணினாவே விளக்குகிறார்....
நான் எனது கண்களைத் திறந்து எனது படுக்கைக்கு மேலே மாட்டப்பட்டிருந்த அன்னைமரியா படத்தையே வெறித்துப் பார்த்தேன். இந்த உருவப்படம் கண்ணீர் வடித்தது. எனது கண்களை நம்பவே முடியவில்லை. எனது நாத்தனார் கிராசியாவையும், மாமியார் அந்தோணினா ஸ்கார்லாத்தாவையும் அழைத்து அந்தக் கண்ணீரைக் காட்டினேன். இது எனது நோயினால் ஏற்பட்ட பிரம்மை என்றுதான் முதலில் அவர்கள் இருவரும் நினைத்தார்கள். ஆனால் நான் அதை அழுத்திக் கூறியதால் அவர்கள் அப்படத்துக்கு அருகில் சென்று பார்த்தனர். ஆம். அப்படத்திலிருந்த அன்னைமரியாவின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. சில கண்ணீர்த் துளிகள் அன்னைமரியாவின் கன்னங்கள் வழியாக வடிந்து எனது படுக்கையில் விழுந்தன. பயத்தினால் அவர்கள் அப்படத்தை வீட்டின் முன்புறத்துக்கு எடுத்துச் சென்றனர். அண்டை வீட்டாரையும் அழைத்தனர். அதைப் பார்த்த எல்லாருமே அன்னைமரியா கண்ணீர் வடித்ததை உறுதி செய்தனர்.
அன்னைமரியா கண்ணீர் வடித்தார் என்பதற்கு அந்தோணினாவின் நாத்தனாரும், மாமியாரும் சாட்சிகள். அன்னைமரியா கண்ணீர் வடித்தததை அந்தோணினா பலமணிநேரம் பார்த்துக்கொண்டிருந்தார். அக்கண்ணீரைத் துடைப்பதற்கு முதலில் தனது கைக்குட்டையாலும், பின்னர் வேறு ஒரு துணியாலும் அவர் முயற்சித்தார். ஆனால் அன்னைமரியா நான்கு நாள்களுக்கு, ஆகஸ்ட் 29ம் தேதியிலிருந்து செப்டம்பர் முதல் தேதிவரை பல தடவைகள் கண்ணீர் வடித்தார். ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் இதைப் பார்ப்பதற்காக, சிரகுசாவுக்கு வந்தனர். அச்சமயத்தில் மூன்று முக்கிய அருள்பணியாளர்களும், நான்கு அறிவியலாளர்களும், மூன்று புகழ்மிக்க மனிதரும் இதைப் பார்வையிட்டனர். இவர்களைக் கொண்ட ஒரு விசாரணைக்குழு உருவாக்கப்பட்டது. செப்டம்பர் முதல் தேதியன்று இக்கண்ணீரை அவர்கள் வேதிய ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இது மனிதக் கண்ணீர் என்று ஆய்வு முடிவுகள் கூறின. இது பல மருத்துவர்களால் கையெழுத்திடப்பட்டது. இவர்கள் விவிலியத்தின்மீது கைவைத்து இது உண்மை என அறிவித்து சாட்சி சொன்னார்கள்.
இக்கண்ணீரில் தோய்த்த அத்துணியின் பாகங்கள் உலகின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டது. இஸ்பெயின் உட்பட பல இடங்களில் பல புதுமைகளும் நடந்தன. இந்த உலகம் செபிக்காததால் அன்னைமரியா கண்ணீர் வடித்தார். குணமடைந்த புதுமையைப் பெற்ற அந்தப் பெண்ணே அன்னைமரியா கண்ணீர் வடித்ததையும் முதலில் பார்த்தார். அந்தோணினா முழு குணமடைந்து 1953ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். பேராயர் Baranzini அக்குழந்தைக்குத் திருமுழுக்கு அளித்தார். சிரக்குசாவில் அன்னைமரியா கண்ணீர் வடித்ததை 1954ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி திருத்தந்தை 12ம் பத்திநாதர் அங்கீகரித்தார்.
சிரக்குசாவில் கண்ணீர் வடித்த அன்னைமரியாவின் திருவுருவப் படத்தைக் கொண்ட அழகிய திருத்தலம் எழுப்பப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் அங்குச் செல்கின்றனர். இந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இப்புதுமை நடந்த 60ம் ஆண்டு சிறப்பிக்கப்பட்டது. இதனை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இம்மாதம் 1ம் தேதி ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்னர் குறிப்பிட்டார். நாம் இறைவன்மீது முழுமையான நம்பிக்கை வைத்து செபம் தியானம் ஆகியவற்றை ஒதுக்காமல் தினமும் செய்வோம். கலவரங்கள் நிறைந்த இன்றைய உலகின் நிலை கண்டு அன்னைமரியா மீண்டும் கண்ணீர் வடிக்காமல் இருக்க, உலகின் அமைதிக்காகச் செபிப்போம்.








All the contents on this site are copyrighted ©.