2013-09-18 16:28:31

30 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய அடக்குமுறை ஆட்சிக்கு மீண்டும் திரும்புவது போன்ற ஒரு நிலை தென் கொரியாவில் உருவாகிவருகிறது - தலத்திருஅவை


செப்.18,2013. பொதுநலனிலும், சமுதாய விவகாரங்களிலும் கத்தோலிக்கர்கள் ஈடுபடவேண்டும் என்று திருத்தந்தை தன் மறையுரையில் சொன்னதை நாம் கவனமாகச் செவி மடுக்கவேண்டும் என்று தென்கொரிய தலத்திருஅவை கூறியுள்ளது.
அரசு புலனாய்வு சேவை என்ற பெயரில் தென்கொரிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஓர் அமைப்பின் செயல்பாடுகள், மக்களின் தனிப்பட்ட வாழ்வை கண்காணிக்கும் செயல்களாக அமைந்துள்ளன என்று, கடந்த சில வாரங்களாக Seoul நகரில் கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள், புத்தமதத்தினர் அனைவரும் இணைந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசின் புலனாய்வுச் சேவைக்கு எதிராக தென்கொரிய தலத்திருஅவை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கைக்கு அந்நாட்டின் 15 கத்தோலிக்க மறைமாவட்டங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
அரசு உருவாக்கியிருக்கும் இந்த அமைப்பினால், நாட்டில் உள்ள அனைவரின் தனிப்பட்ட வாழ்க்கை கண்காணிக்கப்படும் என்றும், இதுபோன்ற ஒரு வாழ்வு கண்ணாடியில் அமைந்த வீட்டில் அரசின் பார்வையில் வாழும் ஒரு பாதுகாப்பற்ற வாழ்வாக அமையும் என்றும் தலத்திருஅவை கூறிவருகிறது.
30 ஆண்டுகளுக்கு முன்னர் தென் கொரியாவில் நிலவிய அடக்குமுறை ஆட்சிக்கு மீண்டும் திரும்புவது போன்ற ஒரு நிலை தற்போது உருவாகிவருவது ஆபத்து என்பதையும் தென் கொரியத் தலத்திருஅவை தெரிவித்துள்ளது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.