2013-09-17 16:49:06

விவிலியத்
தேடல் வீட்டுப் பொறுப்பாளர் உவமை பகுதி 2


RealAudioMP3 செல்வரைப் பற்றிய இரண்டாவது உவமையாக, லூக்கா நற்செய்தி 16ம் பிரிவில் நாம் காணும் 'வீட்டுப் பொறுப்பாளர்' உவமையில் நம் தேடலை சென்ற வாரம் துவங்கினோம். இயேசு கூறிய அனைத்து உவமைகளிலும் அர்த்தம்கொள்ள கடினமான ஓர் உவமை இது என்று கூறும் விவிலிய ஆய்வாளர்கள், இவ்வுவமைக்குப் பல்வேறு விளக்கங்களையும் கூறியுள்ளனர்.
இவ்வுவமையின் முதல் பகுதி குழப்பமில்லாமல் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, செல்வர் ஒருவரது இல்லத்தைக் கண்காணிக்க, ஒருவர் பொறுப்பாளராக இருந்தார் என்று இவ்வுவமை ஆரம்பமாகிறது. இப்பொறுப்பாளரைப் பற்றி சொல்லப்படும் கருத்துக்கள் முதலில் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இவர் இச்செல்வரிடம் அடிமையாக பணிபுரிந்தவராக இருக்கலாம். அவர் அடிமையாக இருந்தபோது, செல்வரின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு, அவரது பாராட்டைப் பெறும் அளவுக்கு கடமை உணர்வுடன் பணிகளைச் செய்திருக்கலாம். இதனால், அவரை அடிமை நிலையிலிருந்து விடுவித்து, தன் இல்லத்தின் பொறுப்பாளராக அச்செல்வர் நியமித்திருக்கலாம்.
இவை எதுவும் இவ்வுவமையில் கூறப்படவில்லை. இவை விவிலிய ஆய்வாளர்களின் கணிப்புக்கள். ஆனால், இதுபோன்ற ஒரு நிலை இவ்வுவமையில் மட்டுமே காணப்படும் ஒரு கனவுக்கதை அல்ல. நாம் அவ்வப்போது இதுபோன்ற செய்திகளைக் கேட்டு வருகிறோம்.

தலைவருக்கும், அடிமைக்கும் இடையே உருவாகும் நம்பிக்கை உறவுக்கு விவிலியத்தில் நாம் அழகானதோர் எடுத்துக்காட்டைக் கூறலாம். தொடக்க நூல் 40,41 ஆகிய பிரிவுகளில் நாம் காணும் ஒரு கதை இது. எகிப்தில் அடிமையாக விற்கப்பட்டு, சூழ்நிலைகளால் சிறையிலும் அடைக்கப்பட்ட யோசேப்பு மீது, அந்நாட்டு மன்னன் பார்வோன் கொண்ட நம்பிக்கை அழகானதொரு கதை.
பெரும் செல்வர்களும், மன்னர்களும் தங்கள் வாழ்வின் பெரும்பாலான நாட்களை அச்சத்திலும் சந்தேகத்திலும் செலவிடும் கட்டாயத்தில் வாழ்பவர்கள். தங்களைச் சுற்றியுள்ள நண்பர்கள், ஊழியர்கள் பலரிடம், பொறாமை, பகைமை ஆகிய உணர்வுகளையே அதிகம் உணரும் செல்வர்கள், அவ்வப்போது நேர்மையானவர்களை, நம்பிக்கைக்குரியவர்களைச் சந்திக்கும்போது, அவர்கள் மீது அளவுகடந்த நம்பிக்கை கொள்வதையும் காணலாம். மன்னன் பார்வோனின் வாழ்விலும், இத்தகையச் சூழலைக் காண்கிறோம். பொதுவாக, ஒரு மன்னனுக்கு மதுவும், உணவும் பரிமாறுபவர்கள் மிக, மிக நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தால் மட்டுமே அப்பணிகளில் நியமனம் பெறுவர். ஆனால், பார்வோனின் அரண்மனையில், அவருடைய நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்கவேண்டிய இவர்கள் இருவரும் குற்றம் புரிந்தனர் என்று தொடக்க நூலில் நாம் வாசிக்கிறோம் (தொடக்க நூல் 40: 1-3)

இத்தகைய ஒரு சூழலில், மன்னன் பார்வோனின் நம்பிக்கையைப் பெறுகிறார் யோசேப்பு. அந்த நம்பிக்கையின் விளைவாக, முதலில் அவரைத் தன் அரண்மனைக்குப் பொறுப்பாளராகவும், பின்னர் எகிப்து முழுவதற்கும் ஆளுநராகவும் பார்வோன் நியமித்தார். பார்வோனின் பாராட்டுக்களைப் பெறும் யோசேப்பு குறித்து தொடக்க நூலில் நாம் காணும் வரிகள் இவையே:
தொடக்க நூல் 41: 39-46
பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி, "உம்மைவிட மதி நுட்பமும் ஞானமும் செறிந்தவர் யாருமிலர். எனவே, நீரே என் அரண்மனையின் பொறுப்பை ஏற்பீர். உம் வார்த்தைக்கு என் மக்கள் எல்லோரும் அடிபணியட்டும். அரியணையில் மட்டும் நான் உமக்கு மேற்பட்டவனாய் இருப்பேன்" என்றான். பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி, 'இதோ! எகிப்து நாடு முழுவதற்கும் உம்மை அதிகாரியாக நியமிக்கிறேன்' என்று சொன்னான். உடனே பார்வோன் தன்கையில் அணிந்திருந்த அரச கணையாழியைக் கழற்றி அதை யோசேப்பு கையில் அணிவித்து, அவருக்குப் பட்டாடை உடுத்தி, பொன் கழுத்தணியை அவருக்கு அணிவித்தான். மேலும் அவரைத் தன் இரண்டாம் தேரில் வலம்வரச் செய்து 'இவருக்கு முழந்தாளிடுங்கள்' என்று ஏவலர் கட்டியம் கூறச் செய்தான்; இவ்வாறு எகிப்து நாடு முழுவதற்கும் அவரை அதிகாரியாக்கினான். மேலும் அவன் யோசேப்பை நோக்கி, 'பார்வோனாகிய நான் கூறுகிறேன். உமது ஒப்புதலின்றி எகிப்து நாடெங்கும் எவனும் கையையோ காலையோ உயர்த்தக்கூடாது' என்றான். எகிப்து நாடு முழுவதற்கும் யோசேப்பு ஆளுநர் ஆனார். எகிப்தின் மன்னனாகிய பார்வோனிடம் பணியேற்றபொழுது, யோசேப்பிற்கு வயது முப்பது.

அடிமையாக எகிப்தில் நுழைந்த யோசேப்பு, எகிப்தின் ஆளுநராக உயர்த்தப்படும் அளவுக்கு மன்னனின் நம்பிக்கையில் வளர்ந்திருந்தார். அத்தகைய அளவுக்கு இல்லையெனினும், நம் உவமையில் சொல்லப்படும் பொறுப்பாளர், வீட்டுத்தலைவரின் உடைமைகளை, பிறருக்குக் கடனாக வழங்கும் அளவுக்கு அவரது நம்பிக்கையைப் பெற்றிருந்தார்.
இப்படிப்பட்ட நம்பிக்கையுணர்வு சிதைக்கப்பட்டது என்ற விவரத்துடன் இவ்வுவமையை இயேசு ஆரம்பிக்கிறார். நம்பிக்கைத் துரோகம் செய்யும் எவரும் பெரும்பான்மையான நேரங்களில் தண்டனைகளைப் பெறவேண்டியிருக்கும். நம் உவமையில் வரும் தலைவரோ பொறுப்பாளருக்கு பெரும் தண்டனைகள் ஏதும் தாராமல், அவரை அழைத்து, கணக்கை ஒப்படைக்குமாறு சொல்கிறார், பணியிலிருந்து நீக்கப்போவதாகச் சொல்கிறார். செல்வரின் இந்தப் போக்கு, இரு கோணங்களில் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. ஒன்று அவரது மென்மையான மனதைக் காட்டுவதாக உள்ளது, இரண்டு, அவருக்கும் வீட்டுப் பொறுப்பாளருக்கும் இடையே உருவாகியிருந்த ஆழ்ந்த நம்பிக்கை உறவைக் காட்டுவதாக உள்ளது.

தான் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டோம் என்ற உறுத்தலைவிட, வீட்டுப் பொறுப்பாளரின் மனம் தன் வாழ்வின் அடுத்தக் கட்டத்தையே அதிகம் சிந்தித்தது. பொறுப்பாளரின் குறுக்குச் சிந்தனை மீண்டும் தலைதூக்கவே, அவர் தன் எதிர்காலத்தை சுகமான வழியில் உறுதிப்படுத்த, மீண்டும் ஒரு நேர்மையற்ற, குறுக்கு வழியைச் சிந்திக்கிறார். தன் தலைவரிடம் கடன்பட்டவர்களைத் தன் பக்கம் வெல்வதற்கு முயற்சிகள் செய்கிறார். இந்த விவரங்களைத் தான் நாம் லூக்கா நற்செய்தி 16ம் பிரிவில் முதல் 7 இறைச் சொற்றொடர்களில் காண்கிறோம். இதுவரை இந்த உவமையில் சொல்லப்பட்டவை எதுவும் நம் சிந்தனைக்கு சவாலாக அமையவில்லை. 8வது இறைச்சொற்றோடரும், அதை தொடர்ந்து இயேசு கூறும் 5 இறைச் சொற்றொடர்களும் இந்த உவமையின் பொருளை உணர்வதற்கு சவாலாக அமைந்துள்ளன.
லூக்கா நற்செய்தி 16 8
நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.

தான் வைத்திருந்த நம்பிக்கைக்குத் துரோகம் செய்த நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதை தலைவர் பாராட்டினார்என்பதை வாசிக்கும்போது, அதைப் புரிந்துகொள்வதற்குச் சிறிது கடினமாக உள்ளது. அடுத்த வரிகளில் இயேசு, 'இவ்வுலகின் மக்கள்' என்ற குழுவினரைப் பாராட்டியுள்ள வார்த்தைகளைப் புரிந்துகொள்வது அதைவிட கடினமாக உள்ளது.

அடுத்தவரைப் பாராட்டுவது, அதிலும் சிறப்பாக, தனக்கு எதிராகச் செயல்படுவோரையும், எதிர் சிந்தனை கொண்டோரையும் பாராட்டுவது என்ற அழகிய குணத்தை நாம் இயேசுவிடம் இருந்து பயிலவேண்டும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி என் நினைவுக்கு வருகிறது. "Give the devil his due" அதாவது, சாத்தானுக்குரிய பாராட்டைக் கொடு. சீசருக்கும், இறைவனுக்கும் உரியவைகளை ஒன்றோடொன்று கலந்து குழப்பாமல், அவரவருக்கு உரியவற்றைக் கொடுக்கச் சொன்னவர்தானே இயேசு. (மத்தேயு 22:21) திறமை கண்டவிடத்து பாராட்டுவதற்கு பரந்த மனம் வேண்டும். இப்படி பாராட்டுவதால், இயேசு சாத்தான் பக்கம், அல்லது நேர்மையற்ற பொறுப்பாளர் பக்கம் சாய்ந்துவிட்டார், அவர் செய்ததை நியாயப்படுத்துகிறார் என்று அர்த்தமல்ல. பாராட்டுவது வேறு, பின்பற்றுவது வேறு.
ஒளியின் மக்களையும் இந்த உலக மக்களையும் ஒப்புமைப்படுத்தி, உலக மக்களின் முன்மதியை பாராட்டுகிறார் இயேசு. இந்த பாராட்டுடன் அவர் நிறுத்தவில்லை. தன் கருத்துக்களைத் தொடர்கிறார். முன்மதியுடன் சேர்த்து வைக்கும் செல்வத்தை, பூச்சி அரித்துவிடக்கூடிய, அல்லது கள்வரால் திருடப்படக்கூடிய கருவூலங்களில் பூட்டிவைப்பதோ, தானியக் கிடங்குகளைப் பெரிதாக்கி மேலும், மேலும் சேர்த்து வைப்பதோ மதியீனம் என்று மதியற்ற செல்வன் உவமை வழியாக எச்சரித்துள்ளார் இயேசு. செல்வத்தை எவ்விதம் சேர்ப்பது என்பதற்கு மாற்றுக் கருத்து ஒன்றையும் அறிவித்துள்ளார்: (லூக்கா 12 : 13-21; 33-34)
லூக்கா 12 : 33
உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை.
வீட்டுப் பொறுப்பாளர் உவமையின் இறுதியில் வறியோரையும், செல்வத்தையும் இணைத்து அவர் மீண்டும் ஒருமுறை கூறும் அறிவுரை இதுதான்:
லூக்கா 16 : 9
ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.
ஏழைகள் விண்ணரசின் உரிமையாளர்கள் என்பது இயேசுவின் தீர்க்கமான எண்ணம். (மத்தேயு 5 : 3; லூக்கா 6 : 20அ) எனவே, அழிந்துபோகும் செல்வங்களைக் கொண்டு இந்த ஏழைகளை நண்பர்களாக்கிக் கொள்வது முன்மதியுடன் நடந்துகொள்ளும் ஒரு செயல். அப்படி செய்தால், விண்ணரசில் நமக்கு வரவேற்பு காத்திருக்கும் என்று தெளிவுபடுத்துகிறார் இயேசு.
வறியோரைத் தேடிச்சென்று உதவுதல், தேடிவரும் வறியோரை வரவேற்றல் என்ற எண்ணங்கள் கத்தோலிக்கத் திருஅவை வரலாற்றில் துவக்கத்திலிருந்தே ஆழமாக வேரூன்றிய பாடங்கள். 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித Asterius என்ற ஆயர், 'வீட்டுப் பொறுப்பாளர்' உவமைக்கு தரும் விளக்கம், இயேசுவின் சிந்தனைகளை எதிரொலிக்கிறது:
"பணம் அல்லது செல்வம், மரணத்திற்குப் பின் ஒருவருக்கு முற்றிலும் பயனற்றுப் போகின்றன. எனவே, அவை பயன்தரும் காலம் வரையில், அதாவது, இவ்வுலகில் செல்வத்தை பயன்படுத்த நம்மால் முடிந்த காலம் வரையில், அதன் சக்தியைத் தகுந்த வகையில் பயன்படுத்த வேண்டும். அவற்றை முக்கியமாக ஏழை மக்களுக்காகப் பயன்படுத்தவேண்டும். அவ்விதம் செய்தால், அந்த ஏழைமக்கள் அடுத்த உலகில் நம்மை வரவேற்கத் தயாராக இருப்பார்கள்."

இயேசு தந்த இந்த ஆலோசனைகளுக்கு, பரிசேயர் அளித்த பதிலையும், அதற்கு மறுமொழியாக இயேசு சொன்ன கருத்துக்களையும் அடுத்த வாரம் தொடர்ந்து தேடுவோம்.








All the contents on this site are copyrighted ©.