2013-09-17 16:47:16

கற்றனைத் தூறும் கூட்டுப்புழுவிலிருந்து... வண்ணத்துப் பூச்சியாக... (Chrysalis)


வண்ணத்துப் பூச்சியின் வாழ்வில், கூட்டுப்புழு ஒரு முக்கிய நிலை. கூட்டுப்புழுக்கள், கிளைகளில், இலைகளின் மறைவில் தொங்கிக்கொண்டிருக்கும்; அல்லது, மண்ணுக்கடியில் புதைந்திருக்கும்.
பல வண்ணத்துப் பூச்சி வகைகள், கூட்டுப்புழு பருவத்தில் தங்களைச் சுற்றி பளபளப்பான கூட்டினை உருவாக்குவதால், ‘தங்கம்’ என்று பொருள்படும் chrysos என்ற பழமையான கிரேக்கச் சொல்லைக் கொண்டு, இந்நிலையை, Chrysalis என்று அழைக்கின்றனர். ஒரு சில வாரங்களிலிருந்து, மாதக் கணக்கில் இந்நிலை தொடரும். ஒரு சில வண்ணத்துப் பூச்சி வகைகளின் கூட்டுப்புழு பருவம் ஈராண்டுகள் வரை நீடிக்கின்றது என்றும் சொல்லப்படுகிறது.
Chrysalis நிலையில், ஒரே இடத்தில் இருக்கவேண்டிய கட்டாயம் இருப்பதால், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு சில கூட்டுப்புழுக்கள் அமிலத்தை வெளியிடுகின்றன. Lycaenid என்ற ஒரு வகை வண்ணத்துப் பூச்சியின் கூட்டுப் புழுக்களை எறும்புகள் பாதுகாக்கின்றன. வெளியிலிருந்து பார்க்கும்போது, கூட்டுப்புழு நிலையில் உள்ள வண்ணத்துப் பூச்சியிடம் எதுவும் நிகழாததுபோல் தெரிந்தாலும், உள்ளுக்குள் அற்புதமான மாற்றங்கள் உருவாகி வருகின்றன.
கூட்டுப்புழு பருவம் நிறைவுபெறும் வேளையில், அக்கூட்டிலிருந்து வண்ணத்துப் பூச்சி வெளியேறுவது ஒரு போராட்டம் போன்று தோன்றும். சிறு துளை வழியே தன்னை வெளிக்கொணரும் இந்தப் போராட்டத்தில் வண்ணத்துப் பூச்சிக்குள் சுரக்கும் திரவங்களால், அது தனக்குத் தேவையான உடல் வடிவையும் இறக்கைகளையும் பெறுகின்றது.

ஆதாரம் - http://www.thebutterflysite.com








All the contents on this site are copyrighted ©.