2013-09-17 16:43:02

அமைதிக்காகவே அணுசக்தி, அழிவுக்கல்ல என்கிறது திருப்பீடம்


செப்.17,2013. அணுசக்தியை இராணுவ நோக்கங்களுக்கென பயன்படுத்தாமல் அதனை உலகம் முழுமையின் அமைதி, நலம் மற்றும் வளத்திற்கென பயன்படுத்தவேண்டும் என்பதை அனைத்துலக அணுசக்தி அமைப்பு உறுதிசெய்யும் வேளையில், அமைதியை நிலைநாட்டும் பாதுகாப்பான முறையில் அணுசக்தி பயன்படுத்தப்படுவதை இவ்வமைப்பு கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார், நாடுகளுடனான உறவுகளுக்கான திருப்பீட அலுவலகத்தின் செயலர் பேராயர் DOMINIQUE MAMBERTI.
அனைத்துலக அணுசக்தி அமைப்பின் 57வது பொதுஅவையில் உரையாற்றிய திருப்பீட அதிகாரி பேராயர் MAMBERTI, அணுசக்தி பயன்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பது, அதன் பாதுகாப்பான பயன்பாடே எனவும் கூறினார்.
சமூக நீதிக்காகவும், உலக ஒருமைப்பாட்டிற்காகவும் உழைக்க திருத்தந்தை தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவதையும் சுட்டிக்காட்டிய பேராயர், இதன் அடிப்படையில் அணுசக்தி தொழில் நுட்பங்கள் குறித்த ஒத்துழைப்பு அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டதாக இருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மருத்துவத்துறையில் அணுசக்தியை பயன்படுத்தும் வசதி அனைவருக்கும் கிடைக்குமொன்றாக மாற்றவேண்டும் எனவும் விண்ணப்பித்தார் அவர்.
அணுஆயதங்களின் பயன்பாடு இவ்வுலகிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் என்பதில் திருப்பீடம் உறுதியாக இருக்கிறது என்பதையும் எடுத்தியம்பினார் பேராயர் MAMBERTI.
சண்டை இடம்பெறும் மத்தியக்கிழக்குப் பகுதியிலிருந்து அணுஆயதங்களும், பெரும் அழிவை உருவாக்கும் ஆயதங்களும் முற்றிலுமாக அகற்றப்படவேண்டியதன் தேவையையும் வலியுறுத்தினார் பேராயர் MAMBERTI.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.