2013-09-16 16:13:15

திருத்தந்தை பிரான்சிஸ் - பாவத்தையும், தீமையையும் வெல்வதற்குத் தகுந்த எதிர்ப்புச்சக்தி கருணையே


செப்.16,2013. உலகையும், மனித குலத்தையும் புற்றுநோயாக பாதித்துவரும் பாவத்தையும், தீமையையும் வெல்வதற்குத் தகுந்த எதிர்ப்புச்சக்தி கருணையே என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
தொடர்ந்து பெய்த மழையிலும், புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரம் மக்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் கருணையை மையப்படுத்தி இஞ்ஞாயிறன்று வழங்கிய நண்பகல் மூவேளைச் செப உரையில் இவ்வாறு கூறினார்.
காணாமற்போன ஆடு, காணாமற்போன நாணயம், காணாமற்போன மகன் என்று லூக்கா நற்செய்தியில் காணப்படும் மூன்று உவமைகளில், மன்னிப்பதன் வழியாக வெளிப்படும் இறைவனின் மகிழ்வு வெளிச்சமாகிறது என்று கூறினார் திருத்தந்தை.
நாம் நீதிமான்கள், எனவே, பிறரைத் தீர்ப்பிட வல்லவர்கள் என்றும், பாவிகள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் நமக்குள் எழும் எண்ணங்களைக் குறித்து எச்சரிக்கை வழங்கியத் திருத்தந்தை, மன்னிப்பு, கருணை ஆகிய பண்புகளே நமக்கு மீட்பளிக்கும் என்று வலியுறுத்தினார்.
உலகம் வழங்கும் நீதி, இவ்வுலகைக் காப்பாற்றும் வலிமை பெற்றது என்று அலகை நமக்குச் சொல்லித்தரும் சோதனையை வெல்லவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலுவையில் வெளியாகும் இறைவனின் நீதியே இவ்வுலகைக் காப்பாற்றமுடியும் என்று கூறினார்.
உங்கள் அனைவரிடமும் நான் இப்போது கேட்பது இதுதான். நீங்கள் கோபம் கொண்டுள்ள ஒருவரை இப்போது நினைவில் கொணர்ந்து, அவர்களுக்காக இப்போது அமைதியில் செபியுங்கள், அவர் மீது பரிவுகொள்ள இறைவன் வரம் தரவேண்டுமென்று செபியுங்கள் என்று கூறியத் திருத்தந்தை, வளாகத்தில் கூடியிருந்த அனைவருடனும் சில மணித்துளிகள் அமைதியில் செபித்தபின், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.