2013-09-16 16:02:22

கற்றனைத்தூறும் ... உலகின் தூங்கா நகரங்கள்


பொருளாதாரம், வேலை வாய்ப்பு, சமூகப் பொழுதுபோக்குகள் என ஒரு நாளின் 24 மணிநேரமும் பரபரப்பாக இருக்கும் நகரங்கள் தூங்கா நகரங்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில், கெய்ரோ(எகிப்து), மொந்தே வீதெயோ(உருகுவாய்), பெய்ரூட் (லெபனன்) மலாகா, மத்ரித், சரகோசா, பார்செலோனா, வலென்சியா, செவிலெ(இஸ்பெயின்), புவனோஸ் ஐரெஸ்(அர்ஜென்டினா) ஆகியவை உலகின் தூங்கா நகரங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளன. இலண்டன்(பிரிட்டன்) 17வது இடத்திலும், பாரிஸ்(பிரான்ஸ்) 18வது இடத்திலும், உரோம்(இத்தாலி) 27வது இடத்திலும் உள்ளன. மும்பை(இந்தியா), தெல் அவிவ்(இஸ்ரேல்), டோக்கியோ(ஜப்பான்), ஜூரிச்(சுவிட்சர்லாந்து), மெக்கா(சவுதி), நியூயார்க், லாஸ் வேகாஸ்(அமெரிக்க ஐக்கிய நாடு), லாகோஸ்(நைஜீரியா), மெக்கா போன்ற சில முக்கிய நகரங்களும் தூங்கா நகரங்கள் என்ற புனைப் பெயரைக் கொண்டுள்ளன. உலக நகரம் எனப்படும் நியூயார்க் நகரம், வணிகம், நிதி, பண்பாடு, பொழுதுபோக்கு போன்ற துறைகளில் சிறந்து விளங்குவதால் உலகம் முழுவதும் இந்நகரின் தாக்கம் அதிகம். ஐக்கிய நாடுகளின் தலைமையகம் நியூயார்க்கில் அமைந்திருப்பதால் பன்னாட்டு அரசியலில் இது சிறப்பு இடத்தை வகிக்கிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் வடகிழக்கில் அட்லாண்டிக் கரையோரம், பெரிய இயற்கைத் துறைமுகம் உள்ள இந்நகரின் மக்கள் தொகை 2008ம் ஆண்டின் கணக்குப்படி 83 இலட்சத்துக்கு அதிகம். 170க்கு மேற்பட்ட மொழிகள் இங்கு பேசப்படுகின்றன. பல்வேறு பண்பாட்டு இயக்கங்களின் தோற்றவாயிலாக அமைந்துள்ள இந்நகரத்தில்தான் ஹிப் காப், பங்க், சல்சா, டிஸ்கோ போன்றவை தோன்றின.

ஆதாரம் : விக்கிப்பீடியா








All the contents on this site are copyrighted ©.